தேர்தல் முடியும்வரை, அரசியல் கட்சிகள், ஊடகங்கள் கமலின் சர்ச்சை பேச்சு குறித்து விவாதிக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே; அவர் ஒரு இந்து என்று அரவக்குறிச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமல்ஹாசன் பேசியிருந்தார். இந்த பேச்சு, பல சர்ச்சைகளை உருவாக்கியது.
டில்லி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கமலுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனிடையே, கைதிலிருந்து தப்பிக்க கமல்ஹாசன் தரப்பில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, இன்று ( 16ம் தேதி) பிற்பகல் விசாரணைக்கு வந்தது.
கமல் தரப்பு வாதம் : அரவக்குறிச்சியில் கடந்த 12-ம் தேதி கமல் பேசியது தொடர்பாக 14-ம் தேதி சிஎஸ்ஆர் இல்லாமல் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது. கமல் பேச்சு காரணமாக அரவக்குறிச்சி பள்ளப்பட்டி பகுதியில் பதற்றமும், பரபரப்பும் நிலவியதாக எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அதற்கான சாட்சியம் இல்லை என்று கமலின் வக்கீல் வாதத்தை முன்வைத்துள்ளார். பழிவாங்கும் நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பல்வேறு அமைப்புகள் கமல் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயல்படுவதால் முன்ஜாமின் வழங்க வேண்டும் என்று கமல் தரப்பு வக்கீல் வாதிட்டார்.
தமிழக அரசு வாதம் : கமலின் சர்ச்சை பேச்சு தொடர்பாக 71 புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. கமல் பேசியது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் ஆணைய விதிகளின் படி மதம், சாதி குறித்து பிரசாரங்களில் பேசுவது சட்ட விரோதமாகும். அதுவும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் பேசியது குற்றமாகும் என தமிழக அரசு வக்கீல் தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார்.
விசாரணை நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல், தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார். தேர்தல் முடியும்வரை, அரசியல் கட்சிகள், ஊடகங்கள் கமலின் சர்ச்சை பேச்சு குறித்து விவாதிக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.