Chennai IIT director Kamakoti Veezhinathan Tamil News: சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குநராக இருந்த பாஸ்கா் ராமமூா்த்தியின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதையடுத்து, சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் பதவிக்கு பேராசிரியா் காமகோடி வீழிநாதன் ஜனவரி 10ம் தேதி நியமனம் செய்யப்பட்டாா். இதைத் தொடர்ந்து, காமகோடி வீழிநாதன் சென்னை ஐ.ஐ.டி.யின் புதிய இயக்குநராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
பேராட்சிரியர் காமகோடி வீழிநாதன் சென்னை ஐ.ஐ.டி.யின் புதிய இயக்குநராக பதவியேற்கும் நிகழ்ச்சி சென்னை ஐஐடி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஐ.ஐ.டி.யின் பிற துறைத் தலைவா்கள், பதிவாளா் ஜேன் பிரசாத் அதிகாரிகள் கலந்துகொண்டனர். சென்னை ஐஐடியின் நிா்வாகிகள் குழுவின் தலைவா் பவன் கோயங்கா, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் காணொலி வாயிலாக பங்கேற்றனா்.
சென்னை ஐ.ஐ.டி இயக்குநராக பதவியேற்ற பின் காமகோடி வீழிநாதன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:-
சென்னை ஐஐடி நிறுவனத்தின் கல்வி மற்றும் ஆய்வின் தரத்தை மேம்படுத்துவதுடன், தர வரிசையில் முன்னணி இடத்தைத் தக்க வைப்தில் எனது கவனம் இருக்கும்.
மக்களின் தேவைக்கான கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி, வளா்ச்சித் துறையில் எங்களின் அதிநவீன பணியின் மூலம், மத்திய, மாநில அரசுகளுடன்ஒருங்கிணைந்து பணியாற்றுவோம். இதன் மூலம் நாட்டின், நாட்டு மக்களின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றும் வகையில் ஐஐடி தனது படைப்புகள், தொழில்நுட்பங்களை உருவாக்கும்.
இணைய வழிக் கல்வி மற்றும் தொலைதூரக் கல்வி மேம்படுத்தப்படும். பாடத்திட்டத்தை வலுவாக்க, பள்ளிக் கல்வி வாரியங்களுடன் இணைந்து ஐஐடி செயல்படும்.
ஆய்வில் ஆா்வத்தை அதிகரிக்க…: தொழிற் கல்விப் பயிற்சிக்கான தரத்தை உயா்த்த, திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் வகுக்கப்படும். பள்ளி மாணவா்களிடையே அறிவியல் மற்றும் ஆய்வில் ஈடுபாட்டை ஊக்குவிக்க அவா்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் அதிகளவில் நடத்தப்படும்.
சா்வதேச மாணவா்களுக்கான தொழில்துறை சாா்ந்த எம் டெக் வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படும். மீளுருவாக்க வேளாண்மை, தொழில்துறை 4.0, மருத்துவத் தொழில்நுட்பம், ஸ்மாா்ட் சிவில் கட்டுமானத் தொழில்நுட்பம் உள்ளிட்ட சமூகப் பிரச்னைகளை வலியுறுத்தி அவற்றுக்கான ஆய்வுகளை மேம்படுத்துவதில் தனிக் கவனம் செலுத்தப்படும்.
பாடத்தில் பன்முகத்தன்மை: மொழித் திறன், தத்துவம், கலை, சுற்றுச் சூழல், நல்லொழுக்கம் ஆகியவற்றுக்குச் சிறப்பு முக்கியத்துவம் அளித்து, பன்முகத் தன்மை கொண்ட பாடத் திட்டம் மேம்படுத்தப்படும்.
ஊக்கம் நிறைந்த, திறமையான எங்கள் ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களின் ஒத்துழைப்புடன் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளின் எல்லைகள் விரிவுபடுத்தப்படும். அதன் மூலம், உலகளாவிய மற்றும் இந்திய ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களின் தோ்வாக சென்னை ஐஐடி விளங்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.