சென்னை ஐஐடியில் மாணவி பாத்திமாவின் மரணத்துக்கு நீதி கேட்டு திங்கள்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்ட இரண்டு ஐஐடி மாணவர்கள் இன்று போராட்டத்தை வாபஸ்பெற்றனர்.
சென்னை ஐஐடியில் முதலாம் ஆண்டு படித்துவந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீஃப் ஐஐடி வளாகத்தில் உள்ள சரயு விடுதியில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்டதாகவும் அவர் உயிரிழப்பதற்கு முன்பு தனது செல் போனில் தனது மரணத்துக்கு பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், ஹேமச்சந்திர காரா,ஆகியோர்தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
சென்னை ஐஐடியில் சாதி, மத ரீதியாக பேராசிரியர்கள் மாணவர்களிடம் பாகுபாடு காட்டுவதால் மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு தற்கொலைக்கு செல்கின்றனர் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. மாணவி பாத்திமாவும் பேராசிரியர்களின் மத ரீதியான பாகுபாடு மற்றும் தொந்தரவால்தான் தற்கொலை செய்துகொண்டார் என்று குற்றம்சாட்டப்பட்டது.
ஐஐடி மாணவி பாத்திமாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு இந்திய மாணவர் சங்கம், காங்கிரஸ் மாணவர் அணி, திமுக மாணவர் அணி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சென்னை ஐஐடி வளாகம் முன்பு உள்ள சாலை போராட்டக் களமாக மாறியது.
பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் தமிழக முதலமைச்சர், டிஜிபியை சந்தித்து புகார் அளித்த பிறகு தனது மகளின் தற்கொலைக்கு காரணம் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனே காரணம் என்று குற்றம் சாட்டினார்.
பாத்திமாவின் தற்கொலை குறித்து நேற்று மத்திய குற்றப் பிரிவு போலீசார், குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதனிடையே, சென்னை ஐஐடியில் படித்துவரும் மாணவர்கள் அசார் மொய்தீன், ஜஸ்டின் ஜோசப் ஆகிய இரண்டு மாணவர்கள், பாத்திமாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு திங்கள்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். மேலும், ஐஐடியில் மாணவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை வெளியிலிருந்து நிபுனர்கள் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ள பாத்திமா படித்த மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறை மாணவரான அசார் மொய்தீன் ஊடகங்களிடம் கூறுகையில், “இந்த விவகாரத்தில் ஐஐடி நிறுவனம் பதிலளிக்க போதுமான நேரம் வழங்கப்பட்டது. வளாகத்தில் தற்கொலைகளுக்கு வழிவகுத்த கட்டமைப்பு பிரச்சினைகள் குறித்து நிர்வாகத்தின் செயலற்ற தன்மையை எதிர்த்து மாணவர்கள் கடந்த வியாழக்கிழமை போராட்டம் நடத்தி இயக்குனரிடம் தெரிவித்தனர். வியாழக்கிழமை அன்று 200 முதல் 250 மாணவர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் நாங்கள் எங்கள் பிரதிநிதித்துவத்தை இயக்குநரிடம் சமர்ப்பித்துள்ளோம்.
அதோடு, ஐ.ஐ.டி-க்குள் மனநலப் பிரச்சினை கட்டமைப்பு ரீதியானது. இது ஒரு தனிப்பட்ட பிரச்சினை அல்ல. இந்த குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் அவருக்கு இதுபோன்ற பிரச்சினைகள் ஏதேனும் இருந்ததா அல்லது அவர் துன்புறுத்தப்பட்டாரா அல்லது பாகுபாட்டை எதிர்கொண்டாரா என்பது எனக்குத் தெரியாது. நாங்கள் விசாரணை கேட்டுள்ளோம் ஏனெனில் ஒரு தற்கொலைக் குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து எங்களுக்கு நியாயமான விசாரணை தேவை. ஆனால் ஐ.ஐ.டி.யில் தற்கொலைகள் மற்றும் ஐ.ஐ.டி மாணவர்களின் மனநலப் பிரச்சினைகள் முடிவடையவில்லை. எங்கள் கோரிக்கை பாத்திமாவுக்கு மட்டுமான நீதி எங்கள் அனைவருக்குமான நீதியும்தான். இந்த நிறுவனத்தில் மேலும் மரணங்கள் நிகழ்வதை நாங்கள் விரும்பவில்லை” என்று கூறினார்.
இந்த நிலையில், 2 மாணவர்கள் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மாணவர்கள் கோரிக்கை குறித்து விளக்க அறிக்கை தர ஐஐடி நிர்வாகம் தரப்பில் கூறியதாகவும் இதன் காரணமாக 2 மாணவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.