மதுரை நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக, கோரிப்பாளையத்தில் தல்லாகுளம் சந்திப்பு முதல் செல்லூர் வரை ரூ.190 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று புதன்கிழமை இரவு அந்த பகுதியில் இரும்பு சாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென இரும்பு சாரம் பாரம் தாங்கமால் சரிந்து விழுந்தது.
இதில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்களில் திருச்சி துறையூரை சேர்ந்த பழனி, அய்யங்காளை, காளி மற்றும் ஜெய்சன் ஆகிய 4 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த 4 பேரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மழையின் காரணமாக கான்கீரிட் கட்டுமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேம்பாலம் கட்டுவதற்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு சாரம் சரிந்து விழுந்ததில் 4 தொழிலார்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: சக்தி சரவணன் - மதுரை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“