மதுரை மாவட்டம் மேலூரில் 1915-ம் ஆண்டு திரெளபதி அம்மனின் சிலை காணமல் போனது. 104 வருடங்கள் கழித்து அந்தக் கோயிலில் பூசாரியாக இருந்தவரின் வீட்டு சுவற்றில் மீட்கப் பட்டுள்ளது.
மேலூரில் 500 ஆண்டுகள் பழமையான திரெளபதி அம்மன் கோயில் உள்ளது. அங்கு 100 ஆண்டுகளுக்கு முன்னர் நாராயணன் என்பவர் பூசாரியாகவும், கந்தசாமி என்பவர் அவருக்கு உதவியாளராகவும் இருந்துள்ளனர்.
நாராயணனுக்கும் கந்தசாமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. அதன் பின்னர் கோயிலில் இருந்த திரெளபதி அம்மன் சிலையையும், நகைகளையும் கந்தசாமி திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக 1915-ல் காவல்துறையில் புகாரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கந்தசாமியின் பேரன் முருகேசப்பிள்ளை திரெளபதி அம்மன் கோயிலுக்கு வந்து, ’உனது தாத்தா வீட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் எனக்கு பூஜை செய்தார் என்றும், அங்கு சிலை இருக்க வாய்ப்பிருப்பதாகவும்’ சாமி கனவில் வந்து சொன்னதாக சொல்லியிருக்கிறார்.
இந்தத் தகவல் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்கு தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரின் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், அந்த வீட்டை ஆராய்ந்தனர். சுவரை தட்டிப் பார்க்கும் போது ஓரிடத்தில் மட்டும் வித்தியாசமான சத்தம் கேட்டிருக்கிறது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அங்கு துளையிட்டிருக்கிறார்கள்.
அங்கு உலோகத்தாலான 2 அடி உயர திரெளபதி அம்மன் சிலை கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 700 ஆண்டுகள் பழமையானதும் கூட.
சிலை மீட்கப் பட்டதைத் தொடர்ந்து நகைகளை தேடி வருகிறார்கள் காவல் துறையினர்.
இதற்கிடையே அந்த வீடு கந்தசாமி குடும்பத்தினரிடமிருந்து இரண்டு முறை கை மாறி தற்போது வேறு நபரிடம் உள்ளது.