/indian-express-tamil/media/media_files/2025/05/05/xOPVTDWWKKrr7zjJkakk.jpg)
சென்னை காட்டாங்குளத்தூரில் மே 3ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்க மதுரையிலிருந்து சென்னைக்கு பயணித்த மதுரை ஆதீனம் அமர்ந்திருந்த கார், உளுந்தூர்பேட்டை அருகே விபத்துக்குள்ளானது.
மதுரை ஆதீனத்தின் TN 64 U 4005 என்ற பதிவு எண்ணுள்ள Fortuner கார், உளுந்தூர்பேட்டை அருகே சேலம் ரவுண்டானா பகுதியில் மற்றொரு காருடன் மோதியது. சம்பவம் தொடர்பாக போலீசார் கூறியதாவது, “மே 2ஆம் தேதி காலை 9.45 மணியளவில் மதுரை ஆதீனம் பயணித்த வாகனம் அதிவேகமாக வந்ததில், மாருதி கார் ஒன்றின் பக்கவாட்டில் உரசியது.
இதனால் இரு வாகனங்களுக்கும் லேசான சேதம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலிருந்து இரு தரப்பினரும் சிறிது வாக்குவாதத்திற்குப் பிறகு சென்றுவிட்டனர்” என தெரிவித்தனர். சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், விபத்து முழுவதுமாக Fortuner காரின் ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்டதென தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுவரை மதுரை ஆதீனம் அல்லது அவரை சார்ந்தவர் யாரும் புகார் அளிக்கவில்லை என்றும், விபத்தைக் கொலை முயற்சியாக சமூக ஊடகங்களில் பரப்புவது தவறானது என்றும், பொய்யான தகவல்களை பகிர்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இவ்விபத்துக்குப் பிறகு “என்னை கொலை செய்ய சதி நடந்துள்ளது” என மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். ஆனால், போலீசார் முதற்கட்ட விசாரணையில் இதுபோன்ற சதிக்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக மதுரை ஆதினத்தின் ஓட்டுநர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.