Nithyananda | madurai-aadheenam | madurai-high-court: மதுரை உயர்நீதிமன்ற கிளையில், நித்தியானந்தா சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறியுள்ளது பின்வருமாறு:-
கடந்த 2012-ம் ஆண்டு என்னை மதுரை ஆதீனம் மடத்தின் இளைய பீடாதிபதியாக அருணகிரிநாதர் அறிவித்தார். இது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 2019-ம் ஆண்டு இந்த அறிவிப்பை அவர் வாபஸ் பெற்றார். இது தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், மதுரை ஆதீன மடத்தின் 292-வது மடாதிபதி அருணகிரிநாதர் உடல்நலக்குறைவால் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்டு 12-ம் தேதி காலமானார். முறைப்படி அவருக்கு பின் நான் தான் மதுரை ஆதீனமாக பொறுப்பேற்க வேண்டும்.
ஆனால், தற்போது எந்தவித ஒப்பந்தமோ, உயிலோ இல்லாமல், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவுக்கு பிறகு, 293-வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் அருணகிரி நாதருக்கு பதிலாக, 293-வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியரை எதிர் மனுதாரர் ஆக சேர்க்கப்பட்டு உள்ளார். இதை நீதிபதி ஏற்றுக்கொண்டு உத்தரவு பிறப்பித்து உள்ளார். இது ஏற்புடையதல்ல. மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன் விசாரணைக்கு வந்தபோது, இது குறித்து தற்போதைய மதுரை ஆதினம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“