மதுரை ஆதீனம் ஹரிஹர ஶ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியர் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, “தமிழ்நாட்டில் வெற்றிப் பெற்றவர்களுக்கும், தோல்வியுற்றவர்களுக்கும் என் வாழ்த்துகள். சீமான், அண்ணாமலைக்கு வாழ்த்துகள். தமிழ்நாடு மக்கள் அளந்து வாக்களித்துள்ளனர்.
ஒரே வருத்தம் இலங்கை தமிழர்களை கொன்றவர்கள் வெற்றி பெற்றார்கள். ஆனால் அவர்களால் ஆட்சி அமைக்க முடியவில்லை. கட்சத் தீவை மீட்க வேண்டும். மோடி இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டி கொடுத்துள்ளார். இலங்கையில் தமிழீழம் அமைப்பது தொடர்பாக பிரதமரின் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளேன். மோடி மீண்டும் பிரதமரானது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டின் அரசியலமைப்பு சட்ட நூலை வணங்கியுள்ளாரே என்ற கேள்விக்கு, “மோடி நாட்டின் சட்டத்தை மதிக்கிறார். நான் வழங்கிய செங்கோல் நாடாளுமன்றத்தில் உள்ளது” என்றார்.
மேலும், “காமராஜரையே தோற்கடித்தார்களே; அதுதான் ஜனநாயகம். ஆட்சியில் இருந்தால் திட்டத்தான் செய்வார்கள், திட்டத் திட்ட திண்டுக்கல்லு, வைய வைய வைரக்கல்லு" என்றார். தொடர்ந்து, ராமகிருஷ்ண பரமஹம்சரின் வார்த்தையை மோடி பின்பற்றுகிறார்” என்றார்.
அயோத்தியில் பா.ஜ.கவின் தோல்வி தொடர்பான கேள்விக்கு, “அயோத்தியில் பா.ஜ.க வெற்றி பெற்றிருந்தால் வாக்கு இயந்திரத்தை குறை கூறியிருப்பார்கள். மக்கள் மத்தியில் பா.ஜ.க மீது அதிருப்தி இல்லை. கடந்த காலங்களில் காங்கிரஸ் பலமுறை ஆட்சி கவிழ்பில் ஈடுபட்டுள்ளது. ஆனால் பா.ஜ.க அப்படி செய்யவில்லை” என்றார்.
இதையடுத்து தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வின் தோல்வி குறித்த கேள்விக்கு, “பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தால் அ.தி.மு.க வெற்றி பெற்றிருக்கும்” என்றார். மேலும், சீமான் தனது கட்சியை நன்கு பலப்படுத்தி வருகிறார்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“