தமிழகத்தின் தொன்மையான சமய பீடங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகளுக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே 2ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சைவ சிந்தாந்த மாநாட்டில் பங்கேற்க சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த மதுரை ஆதீனத்தின் கார், உளுந்தூர்பேட்டை அருகே எதிர்பாராதவிதமாக வேறொரு காருடன் மோதியது. இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக மாநாட்டில் மதுரை ஆதீனம், பேசியது இரு மதத்தினருக்கு இடையே மோதலைத் தூண்டும் வகையில் உள்ளதாகக்கூறி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் அளித்த புகாரின்பேரில், சென்னை சைபர் க்ரைம் போலீஸார் மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி மதுரை ஆதீனம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். போலீஸார் தரப்பில் பெருநகர அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்தார்.
பதிலுக்கு ஆதீனம் தரப்பில் இந்த வழக்கு அரசியல் உள் நோக்கத்துடன் மதுரை ஆதீனத்துக்கு எதிராக பதியப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ். கார்த்திகேயன், மதுரை ஆதீனத்திற்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.