Advertisment

'இரு மாநிலத்துக்கு பகை உருவாக்கும் பவன் கல்யாண்': உதயநிதி குறித்த கருத்துக்கு மதுரை போலீசில் புகார்

"துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஒருமையில் பேசி இரு மாநிலத்தின் இடையே பகை உருவாக்கும் வகையில் செயல்பட்டுள்ளார்." என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Madurai advocates file complaint against Pawan Kalyan for speaking about Udhayanidhi Stalin Tamil News

பவன் கல்யாண் பேசியது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின் 'லெட்ஸ் வெயிட் அண்ட் சி' என்று பதிலளித்தார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் கடந்த 2023 செப்டம்பர் 2 ஆம் தேதி ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்ற பெயரில் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய தற்போதைய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ‘‘சனாதன தர்மம் சமூக நீதிக்கு எதிரானது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்க முடியாது. ஒழிக்கத்தான் வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப் பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் வேலை’’ என்று தெரிவித்தார். 

Advertisment

இதனையடுத்து, சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சுக்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்தது. சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், பிஹார், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ஒரே கோர்ட்டில் விசாரிக்க வேண்டும் என உதயநிதி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

பவன் கல்யாண் மறைமுக சாடல் 

இந்நிலையில், சனாதனம் குறித்து கருத்து தெரிவித்த உதயநிதியை பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக சாடி இருந்தார் ஆந்திராவின் துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண்.

இது தொடர்பாக திருப்பதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பவன் கல்யாண், “இங்கே நிறைய தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என்பதால் தமிழிலேயே சொல்கிறேன். சனாதனம் என்பது ஒரு வைரஸ் மாதிரி. அதை நாசம் செய்யவேண்டும் என்று தமிழ்நாட்டில் ஒருவர் சொல்லியிருக்கிறார். 

ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் இதை யார் சொல்லியிருந்தாரோ அவருக்கு சொல்லிக் கொள்கிறேன். உங்களால் சனாதன தர்மத்தை அழிக்கமுடியாது. சனாதன தர்மத்தை யாரேனும் அழிக்க முயன்றால், ஏழுமலையானின் பாதத்தில் இருந்து சொல்கிறேன், நீங்கள்தான் அழிந்து போவீர்கள். உங்களைப் போல நிறைய பேர் வந்து போய்விட்டார்கள். ஆனால் சனாதன தர்மம் அப்படியே தான் நிலைத்திருக்கிறது.

சனாதன தர்மத்தின் மீதான தாக்குதலை யாரும் ஒருபோதும் கண்டிப்பதில்லை. யாரும் கண்டிக்காவிட்டாலும் தவறு எப்போதும் தவறுதான். நீங்கள் அரசியல்ரீதியாக சரியாக இருக்க விரும்புகிறீர்கள். ஆனால் நான் உண்மையை பேச விரும்புகிறேன். மதச்சார்பின்மை என்பது ஒரு வழிப் பாதை அல்ல. அது இருவழிப் பாதை. மரியாதை கொடுத்தால்தான் மரியாதை கிடைக்கும்” என்று அவர் கூறியிருந்தார். 

உதயநிதி பதில் 

இந்நிலையில், பவன் கல்யாண் பேசியது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின் 'லெட்ஸ் வெயிட் அண்ட் சி' என்று பதிலளித்தார். 

புகார் 

இந்த நிலையில், நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. "துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஒருமையில் பேசி இரு மாநிலத்தின் இடையே பகை உருவாக்கும் வகையில் செயல்பட்டுள்ளார். எனவே பவன் கல்யாண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Udhayanidhi Stalin Pawan Kalyan Madurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment