மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2015ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு 2019ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால், கட்டுமானப் பணிகள் தொடங்காமல் சுற்றுச்சுவர் கட்டியதோடு கிடப்பில் போடப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டுவதற்கு ஜப்பான் நிறுவனம் ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கியதையடுத்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விடிவு காலம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருந்தாலும் எய்ம்ஸ் மருத்துவமனை என்பது தமிழ்நாட்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. அதனால், தமிழகத்தின் நீண்ட கால கோரிக்கையான எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 2015ம் ஆண்டு பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. ஆனால், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு, தடைகளைக் கடந்து பிரதமர் மோடி 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி அடிகல் நாட்டினார். ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை. சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு, சாலைகள் அமைக்கப்பட்டதோடு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளோடு கிடப்பில் சென்றது.
இதனைக் குறிப்பிட்டு, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் 2021ம் ஆண்டு தேர்தல் பிரசாரம் செய்தபோது, எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட செங்கல்லைக் காட்டி இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என்று கிண்டல் செய்து எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் கட்டப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டு பேசினார். உதயநிதியின் இந்த விமர்சனம் தேர்தல் நேரத்தில் பரவலாக கவனம் பெற்றது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்காமல் கிடப்பில் சென்றதற்கு காரணம், இந்த செயல்படுத்துவதற்காக கடன் வழங்குவதாகக் கூறிய ஜப்பான் ஜைக்கா நிறுவனம் நிதி வழங்கவில்லை. அதனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கமுடியாமல் முடங்கியது. இதனிடையே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பதற்கு மாணவர் சேர்க்கையும் நடந்தது. கட்டடம் இல்லாததால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்ந்த 50 எம்.பி.பி.எஸ் மாணவர்கள் பக்கத்து மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் கலப்பு முறையில் வகுப்பு நடத்த அனுப்பப்பட்டனர். இப்படி மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்களின் வகுப்பு ராமநாதபுரத்தில் தமிழக அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களுடன் தொடங்கியுள்ளது.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக 222 ஏக்கர் நிலம் கையப்படுத்தப்பட்டு மாநில அரசு மத்திய சுகாதாரத் துறைக்கு ஒப்படைத்தது. அந்த நிலத்தில் 90 சதவீதம் சுற்றுச்சுவர்கள் எழுப்பும் பணி நிறைவடைந்துள்ளது. அதற்கு பிறகு, கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. அதே நேரத்தில், அங்கே புதிதாக அமைக்கப்பட்ட சாலைகள் நல்லை நிலையில் பளபளப்பாக உள்ளன.
இதனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கி எப்போது முடிவடையும் எப்போது விடிவு கிடைக்கும் என்று மதுரை மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.
இந்த நிலையில்தான், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு இந்தியா – ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்துடனான கடன் ஒப்பந்தம் 26.03.2021 இல் கையெழுத்தானது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு ஜைக்கா நிறுவனம் 82 சதவீதம் நிதியை வழங்கும். மீதம் 18 சதவீதம் நிதியை மத்திய அரசு வழங்குகிறது. வெளிநாட்டு நிதியுதவியுடன் மதுரை எய்ம்ஸ் கட்டப்படுவதால் நிதி பிரச்னை இருக்காது என்று பேசப்பட்டது. ஆனால், இப்போது கட்டுமானப் பணிக்கு நிதி ஒதுக்காமல் மதுரை எய்ம்ஸ் கிடப்பில் போடப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாக எய்ம்ஸ் திட்டத்திற்கு மத்திய அரசே நிதி ஒதுக்கிய நிலையில், மதுரை எய்ம்ஸ்க்கு மட்டும் வெளிநாட்டு நிறுவனத்திடம் கடன் கேட்கப்பட்டது என்று முந்தைய அதிமுக அரசோ அல்லது தற்போதைய திமுக அரசோ கேள்வி எழுப்பவில்லை. அதே நேரத்தில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று தென் மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி நடக்காமல் உள்ளது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தொடர்ந்து மக்களவையில் குரல் கொடுத்து வருகிறேன். அதன் ஒவ்வொரு கட்ட நகர்வுக்கும் பெரும் முயற்சி செய்து வருகின்றேன். அந்த அடிப்படையில் மக்களவையில் விதி எண் 377-ன் படி மதுரை எய்ம்ஸ் பற்றி முழுவிவரங்கள் தரும்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் கேட்டிருந்தேன்.
தற்போது முழு விவரத்தையும் குடும்ப நலத்துறை சுகாதாரத்துறை செயலர் கொடுத்துள்ளார். அதில், முன் முதலீட்டு பணிகள் 92 முடிந்து இருக்கிறது. மொத்த திட்ட மதிப்பீட்டில் ரூ.1,977 கோடியில் ஜைக்கா நிறுவனம் ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது. மீதி நிதியை வரும் அக்டோபர் 26ம் தேதிக்குள் வழங்கிவிடுவதாக கூறப்பட்டுள்ளது. அதனால், விரைவில் கட்டுமானப்பணிகள் தொடங்கிவிடும்.” என்று சு. வெங்கடேசன் கூறினார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கப்படும், கட்டுமானப் பணிகள் எப்போது முடிவடைந்து எப்போது விடிவு காலம் ஏற்படும் என்று காத்திருந்த தென் மாவட்ட மக்களுக்கு சு.வெங்கடேசன் தெரிவித்துள்ள தகவல் இதோ விடிவு காலம் வந்துவிட்டது என்பதாக அமைந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“