மதுரை பெருங்குடியிலுள்ள விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், இலங்கை, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு வெளிநாட்டு சேவை மற்றும் சென்னை, மும்பை, பெங்களூர், டெல்லி, ஹைதராபாத் நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவையும் நடைமுறையில் இருந்து வருகிறது. இருந்தாலும், மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றி, 24 மணி நேர சேவையை ஏற்படுத்த வேண்டும் என வணிகர்கள், வியாபாரிகள் சங்கத்தினர், தொழில் வர்த்தக சங்கம் மற்றும் அரசியல் கட்சியின் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையின் அடிப்படையில் அக்டோபர் இறுதிக்குள் மதுரை விமான நிலையத்தை 24 மணி நேர சேவையாக மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக கூடுதல் பணியாளர், தொழில் பாதுகாப்பு படையினர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் நடப்பதாக விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து மதுரை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது, “தற்போது மதுரை விமான நிலையம் காலை 7 முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது. 24 மணி நேர சேவைக்கு கூடுதல் ஆட்கள் தேவை. இதற்காக, கூடுதலாக மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) வீரர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர். இரவு நேர விமான சேவையை தொடங்கும் சூழலில் பல்வேறு விமானங்கள் வந்து செல்லவேண்டும். இதற்காக விமான நிறுவனங்களுக்கும் ஆணையம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அக்.29 முதல் 24 மணி நேர சேவை ஆரம்பிக்கும் நிலையில், மதுரையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு பயணிக்கும் இரவு நேர பயணிகள் திருச்சி, சென்னை விமான நிலையத்திற்கு செல்வது தவிர்க்கப்படும். தென் மாவட்ட மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். விமான நிறுவனங்களின் வருகையை பொறுத்து புறப்படும் நேரத்திற்கான அட்டவணை, இயக்கம் குறித்த அறிவிப்பும் வெளியாகும்” எனத் தெரிவித்தனர்.
செய்தி: சக்தி சரவணன் - மதுரை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“