மதுரை விமான நிலையம் விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்மக்கள் சார்பில் நடத்தப்பட்ட போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டது.
தமிழகத்தில் சென்னை, கோவை மாவட்டத்தைத் தொடர்ந்து அதிக பயணிகளை கையாளும் விமான நிலையமாக மதுரை விமான நிலையம் செயல்பட்டு வருகிறது . பல மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். சென்னை, பெங்களூரூ, ஹைதராபாத், டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்கும், சிங்கப்பூர், துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக, 633.17 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு, அதனை கையகப்படுத்துவதற்காக சின்ன உடைப்பு கிராமத்திற்கு அதிகாரிகள் வருகை தந்தனர். இதனால், கட்டடங்களை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, இடம் கொடுத்தவர்களுக்கு கூடுதல் இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு கோரி போராட்டம் நடத்தப்பட்டது. அவ்வாறு செய்யாமல் நிலம் கையகப்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
/indian-express-tamil/media/media_files/2024/11/17/5sQzDiTaICRTPbv3MHMl.jpg)
குறிப்பாக, கிராமத்தின் முன்புறமுள்ள தியாகி இமானுவேல் சேகரன் சிலை முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களுடன் தெற்கு தாசில்தார் விஜயலட்சுமி மற்றும் மதுரை விமான நிலைய நில எடுப்பு தாசில்தார் பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பேரில், தங்களுக்கு மூன்று சென்ட் இடம் வழங்க வேண்டுமெனவும், அதே பகுதியில் பள்ளிக்கூடம், கோயில் இடுகாடு போன்ற அத்தியாவசிய வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தி தர வேண்டுமெனவும் அதிகாரிகளிடம், பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது. இதற்கு, ஏற்கனவே நிலம் கையகப்படுத்துதல் குறித்த அறிவிப்பு வெளியானதும் இழப்பீட்டு தொகை வழங்கியதாகவும், தற்போது விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் எனவும் தாசில்தார் மற்றும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் சின்ன உடைப்பு கிராம மக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாததால், இன்றைய தினம் கிராம மக்கள் இணைந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் வருவாய் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இன்று காலை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குறிப்பாக, சின்ன உடைப்பு பகுதியில் கையகப்படுத்தப்பட்ட இடத்தில் உள்ள கட்டடங்களை இடிக்க எதிர்ப்பு கூறி, இடம் கொடுத்தவர்களுக்கு கூடுதல் இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு கோரி போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட இடங்களில் இருந்து வீடுகளை காலி செய்ய ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டதையடுத்து போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“