/indian-express-tamil/media/media_files/2025/09/11/madurai-airport-2025-09-11-12-28-54.jpg)
Madurai Airport naming controversy
மதுரை விமான நிலையத்திற்கு பெயர் சூட்டுவது தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருந்தார். இதற்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களைத் தொடர்ந்து அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும் எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
"சமூகத்தைச் சார்ந்து பலர் வெவ்வேறு தலைவர்களின் பெயர்களை வைக்க வேண்டும் என்று கோரிக்கைகளை வைக்கிறார்கள். ஒருவர் முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைக்க வேண்டும் என்பார்; மற்றொருவர் இமானுவேல் சேகரன் பெயர் வைக்க வேண்டும் என்பார். ஆனால், எங்கள் கட்சியின் நிலைப்பாடு மிகவும் எளிமையானது – எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத் தலைவரின் பெயரும் வேண்டாம்.
தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில், வரலாற்று சிறப்புமிக்க பாண்டிய மன்னர் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் பெயர் வைக்கப்பட வேண்டும். நீதிக்காக கண்ணகி தனது கால் சிலம்பை உடைத்தபோது, அரசவையில் நீதியை நிலைநாட்ட முயன்றவர் அவர். அந்தப் பாண்டிய மன்னனின் வரலாறு எங்களுக்குப் பெருமை சேர்க்கும். எனவே, மதுரை விமான நிலையத்துக்கு பெயர் சூட்டும் போது பாண்டியன் நெடுஞ்செழியன் பெயரே வைக்கப்பட வேண்டும். தேவையெனில் அதற்காக நாங்கள் போராடுவோம்; நான் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக அந்தப் பெயரை வைப்பேன்" என்று சீமான் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.