/indian-express-tamil/media/media_files/2025/01/18/DLS5gm5IdDPOUdSCkyLy.jpg)
திருச்சி, மதுரையில் டைட்டில் பூங்கா பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி
திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரையில் டைடல் பூங்கா பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், சுமார் 5,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் டைடல் பார்க் நிறுவனம், சென்னை, தரமணி, பட்டாபிராம், கோயம்புத்தூரைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரையில் டைடல் பூங்கா அமைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. திருச்சிராப்பள்ளியில் திருச்சிராப்பள்ளி - மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் என்ற இடத்தில், ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு அருகில் இந்த டைடல் பார்க் அமைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 14.16 ஏக்கர் நிலப்பரப்பில் 5.58 லட்சம் சதுரடியில் ரூ.315 கோடியில் இந்த பூங்கா அமைகிறது. தரைதளம் மற்றும் ஆறு தளங்களுடன் இந்த டைடல் பார்க் அமைய உள்ளது.
இதேபோல், மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 9.97 ஏக்கர் நிலத்தில் 5.67 லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பார்க் கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தரை மற்றும் 12 தளங்களுடன் மதுரையில் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. ரூ.289 கோடி செலவில் கட்டப்படும் இந்த டைடல் பார்க்கில் 5 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
அந்த வகையில், இந்த இரண்டு டைடல் பூங்கா பணிகளுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி கோரி டைடல் பூங்கா நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது.தற்போது, அதனைப் பரிசீலனை செய்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக டைடல் பூங்காவின் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.