Madurai-based intersex activist in national council for transgender persons : மத்திய சமூகநீதித்துறை மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்திருக்கும் திருநங்கைகளுக்கான கவுன்சிலில் மதுரையை சேர்ந்த இண்டெர் செக்ஸ் மக்களின் உரிமைகளுக்காக பாடுபடும் செயற்பாட்டாளர் கோபி சங்கர் இடம் பெற்றுள்ளார். ஐந்து பேர் கொண்ட கவுன்சிலில் மிகவும் இளையவர் கோபி சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களின் பிரதிநிதியாக அவர் திகழ்வார். 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவர், ஆசியாவிலேயே முதன்முறையாக எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ சமூகம் சார்ந்த மக்களுக்காக மதுரையில் நிகழ்வு ஒன்றை நிகழ்த்தினார். மாற்று பாலினத்தவர்களுக்கான முதல் உதவி மையத்தையும் அவர் நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு யு,ஜி.சி (பல்கலைக்கழக மானியக்குழு) மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் உறுப்பினராகவும் திகழ்ந்தார். மாற்றுப்பாலினத்தவர்களுக்கான சொற்களை தமிழில் உருவாக்கியவர் மேலும் தமிழில் பாலின மாறுபாடுகள் குறித்த முதல் புத்தகத்தை அவர் எழுதியுள்ளார்.
”இந்த கவுன்சில் என்பது 10 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு கிடைத்த ஒன்றாகும். பல்வேறு சவால்களை உடைத்து கொள்கைகளை உருவாக்க எடுக்கப்பட்டுள்ள முதல் அடி இது. இண்டெர்செக்ஸ் மக்கள் தங்களை இது போன்ற கொள்கைகள் முடிவுகளுக்கு வெளியே தான் இருக்கின்றார்கள். பாலின அடையாளம் மற்றும் பாலின பண்புகள் குறித்த வேறுபாடுகளும் புரிதல்களும் குறைவாகவே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இண்டெர்செக்ஸ் குழந்தைகளுக்கு நெறிமுறைகள் அற்ற முறையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அவர்கள் மீது நடத்தப்படும் மீறல்களுக்கு தீர்வுமுறைகள் காண இயலாதவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள். கல்வி, சுகாதாரம், மற்றும் வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்தையும் அணுகுவதில் பல்வேறு சிக்கல்களை அவர்கள் சந்திக்கின்றனர்” என்று அவர் இது தொடர்பாக கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil