Madurai High Court | Tamilnadu Government: மதுரையில் கடந்த மாத இறுதியில் சித்திரை திருவிழா பெரும் விமரிசையாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில், நகர் முழுதும் சுமார் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இருப்பினும், மதுரை முழுதும் குற்ற சம்பவங்கள் வழக்கத்திற்கு மாறாக அரங்கேறியது. நகரின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மோதலில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் கான் முகமது என்பவர் ஏப்ரல் 22 அன்று இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த சிலர் இளைஞர்கள் கஞ்சா போதையில் அவரை அடித்து காயப்படுத்தியுள்ளனர். படுகாயம் அடைந்த கான் முகமது அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதேபோல், அந்த இளைஞர்கள் அப்பகுதியில் இருக்கும் சில கடைகளை அடித்து நொறுக்கியும் ரகளை ஈடுபட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தொடர்பாக இளைஞர்கள் மீது 3 வழக்குகளை ஒத்தக்கடை காவல்துறையினர் பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்த சி.சி.டி.வி காட்சிகளை தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஆளும் தி.மு.க அரசை கடுமையாக சாடியிருந்தார். அவரைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.
ஐகோர்ட் சரமாரி கேள்வி
இந்நிலையில், மதுரை ஒத்தக்கடை பகுதியில் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கஞ்சா வழக்குகள் தொடர்பாக தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரியான கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? எத்தனை வழக்குகளில் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது? என அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். மேலும், ஒத்தக்கடை வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“