இந்தியாவின் மிகப்பெரிய முற்போக்கான திட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம். இத்திட்டம் ஒட்டுமொத்த உலகிற்குமே ஒரு பாடமாக அமைந்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி சட்டம் 2005ஆம் ஆண்டு இந்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இதன்பின், 2008 ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.
ஊரக பகுதிகளில் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒரு நபருக்கு 100 நாட்களுக்கு வேலை வழங்குவதை இந்த சட்டம் உத்தரவாதம் அளிக்கிறது.கிராம பஞ்சாயத்துகளே வேலை வழங்கும் பணிகளை மேற்கொள்கின்றன. 18 வயது பூர்த்தியான திறன் சாரா உடல் உழைப்பு கோரும் வேலை செய்ய விரும்பும் நபர்களுக்கு இந்த பணி வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கரூர் அரவக்குறிச்சி கிராம பஞ்சாயத்தில் நடந்த முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றக்கிளை நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது, "மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை பெரும்பாலான ஊராட்சி தலைவர்கள் கொள்ளையடிக்கும் திட்டமாக பயன்படுத்தி வருகின்றனர். மகாத்மா பெயரை வைத்து கொண்டு முறைகேடு செய்வது வியப்பாக உள்ளது.
இத்திட்டம் அமல்படுத்தப்படுவதை அதிகாரிகள் முதல் அலுவலர்கள் வரை முறையாக கண்காணிப்பது இல்லை. அதிகாரிகள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்படுவதும் இல்லை. கண்காணிப்பதும் இல்லை எனக்கூறியதுடன், மத்திய ஊழல் தடுப்பு பிரிவு இயக்குநரகம், தமிழக ஊரக வளர்ச்சி துறை செயலர், கரூர் ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“