மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மதுரையுடன் பிற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ஆனால் மதுரையில் இன்னும் கட்டுமானப் பணி தொடங்கப்படவில்லை.
இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க உத்தரவிடக் கோரி பாஸ்கர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி தாமதம் தொடர்பாக மத்திய அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.
“மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் எப்போது அறிவிக்கப்பட்டது? கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? கட்டுமான பணிகள் எப்போது தொடங்கி எப்போது முடிப்பீர்கள்? ”என்று அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, 'கொரோனா தொற்று காலத்தால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தாமதம் ஏற்பட்டது, கட்டுமானப் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 2026-க்குள் பணிகள் முடிந்துவிடும்' என்றும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது இடைமறித்த நீதிபதிகள்,”கொரோனோ 2022 ஆம் ஆண்டிலேயே முடிந்துவிட்டது. அதனை காரணம் காட்டாதீர்கள்" என்று தெரிவித்தனர். மேலும், தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது நிறைவடையும் என மத்திய சுகாதாரத்துறை செயலர் எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வருகிற செப்டம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“