மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நக்கீரர் அலங்கார வளைவு உள்ளிட்ட நுழைவாயில்களை அப்புறப்படுத்த கோரி வழக்கறிஞர் ஜைனப் பீவி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நக்கீரர் அலங்கார வளைவை பொதுமக்களுக்கு சிரமமின்றி அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், சாலைகள் விரிவுபடுத்தும் போது அந்த பகுதியில் உள்ள அலங்கார நுழைவாயில்களையும் அப்புறப்படுத்தினால் தானே போக்குவரத்து சீராகும் என்றும், மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகில் உள்ள நுழைவாயிலையும் அகற்றிடவும் உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும், நுழைவாயில்களை அப்புறப்படுத்துவது பற்றி மதுரை காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய ஆணை பிறப்பித்துள்ளார். அத்துடன் தலைமை பொறியாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 10-க்கு ஒத்தி வைத்தனர்.
செய்தி: சக்தி சரவணன் - மதுரை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“