Advertisment

தவறை சுட்டிக்காட்டினால் குண்டாஸ் போடுவதா? மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

"தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள் மீது குண்டாஸ் போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது" என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Madurai Bench of Madras High Court condemns Panchayat president on MGNREGA 100 Days Work Tamil News

புதுக்கோட்டை, சங்கம்விடுதி நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாக தொடரப்பட்ட வழக்கை சி.பி.சிஐ.டி-க்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Madurai High Court: புதுக்கோட்டை சங்கம்விடுதி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரி கரம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். 

Advertisment

அந்த மனுவில், “புதுக்கோட்டை சங்கம்விடுதி கிராமத்தில் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த நீரை அருந்திய பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இந்த வழக்கு முறையாக விசாரிப்படுவதாக தெரியவில்லை. புதுக்கோட்டையில் இரட்டை குவளைமுறை தற்போதும் நடைமுறையில் உள்ளது. வன்னியன் விடுதி, அரையாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள டீக்கடைகளில் இரட்டை குவளை முறை நடைமுறையில் உள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொழிஞ்சிஅம்மன் மஹால் மற்றும் எம்ஆர்பி திருமண மண்டபங்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இது தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, புதுக்கோட்டை சங்கம்விடுதி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றுவதோடு, அந்த கிராமத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.

இரட்டை குவளை முறை பயன்பாட்டை தடுப்பதோடு, பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள். புதுக்கோட்டை மாவட்ட திருமண மண்டபங்களை பயன்படுத்தவும், வைராண்டி கண்மாயில் குளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார். 

மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், ராஜசேகர் அமர்வு முன்பாக இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், “மனுதாரர் குறிப்பிடும் சங்கன்விடுதி கிராமத்தில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகின்றனர். ஏப்ரல் 25 ம் தேதி காலை 10.30மணி அளவில் அதே பகுதியில் வசித்து வரும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இளையராஜா என்பவர் குடிநீர் தொட்டியினுள் கிடப்பது பாசியா? சாணமா? என தொட்டியை சுத்தம் செய்தவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு, அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதனைத்தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று நீரின் மாதிரியை எடுத்து பரிசோதனை செய்ததில், நீரில் கலந்திருந்தது பாசி என்றும், அந்த நீர் குடிப்பதற்கு உகந்தது என்றும் தெரியவந்தது. பின்னர் அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் குறிப்பிடுவது போல இரட்டை குவளை முறை, திருமண மண்டபங்களை பயன்படுத்த விடாமல் தடுப்பது, பொது குளத்தை பயன்படுத்த அனுமதிக்காமல் இருப்பது போன்ற எவ்விதமான தீண்டாமை சம்பவமும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது நீதிபதிகள், “இரட்டை குவளை முறை நடைமுறையில் இல்லை என எப்படி உறுதியாக சொல்ல முடியும்? இரட்டை குவளை முறை நடைமுறையில் இருப்பதை நிரூபித்து விட்டால் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் பதவி விலக தயாரா? என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, "சமூகத்தில் நிகழும் தவறுகளை தனிநபர் சுட்டிக் காட்டினால் அதனை களைந்து சரிசெய்வதை விடுத்து, சுட்டிக்காட்டிய நபர் மீது நடவடிக்கை எடுப்பது ஏற்கத்தக்கது அல்ல. தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள் மீது குண்டாஸ் போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை பொருத்தவரை மனுதாரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முறையாக வழக்கப்பதிவு செய்யப்படவில்லை. ஆகவே இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி உத்தரவிடப்படுகிறது. வழக்கின் ஆவணங்களை ஒரு வாரத்திற்குள் சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்க வேண்டும்” என்றும் அவர்கள் உத்தரவிட்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Madurai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment