மதுரையைச் சேர்ந்த சகா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "தமிழகத்தில் சட்டப் படிப்புகள் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை வருடம் வருடம் அதிகரித்து வரும் நிலையில், சட்டக் கல்லூரி மற்றும் சட்டப் பல்கலைக்கழகங்களில் ஆசிரியரின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. திருநெல்வேலி,மதுரை, ராமநாதபுரம், திருச்சி ,தேனி ஆகிய சட்ட கல்லூரிகளில் குறைவான முழு நேர விரிவுரையாளர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கல்லூரிகளில் முழு நேர மற்றும் பகுதிநேர விரிவுரையாளர் பணிகள் காலியாக உள்ளது. இதனால் சட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் முழுமையாக தங்களது பாடங்களை கற்க முடியாத சூழல் ஏற்படுகிறது. அரசு சட்டக் கல்லூரிகளில் நிலையான ஆசிரியர்கள் இல்லாத காரணத்தினால் மாணவர்கள் முழுமையான சட்ட திட்டங்களை கற்க முடியாத சூழல் ஏற்படுகிறது. ஆசிரியர் வழிகாட்டுதல் இன்றி, மாணவர்கள் பயிற்சி பெற முடியாமல் தவிக்கின்றனர்.
எனவே, மதுரை, தேனி, காரைக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் நிரந்தர விரிவுரையாளர், தற்காலிக விரிவுரையாளர்களை , இந்திய பார் கவுன்சில் சட்டக் கல்வி விதிகளின்படி உடனடியாக நிரப்ப உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 'தமிழகத்தில் 7 அரசு சட்டக் கல்லூரியில் முதல்வர் இல்லை, அரசு சட்டக் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தாத நிலையில் அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் தமிழகத்தில் மூடிவிடலாமா?' என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், 'தமிழகத்தில் மொத்தம் எத்தனை சட்டக் கல்லூரிகள் உள்ளன. அதில் விரிவுரையாளர்கள் பணியாற்றுகின்றனர் மற்றும் மாணவர்கள் எத்தனை பேர் பயில்கின்றனர்? அரசு சட்டக் கல்லூரிகளில் எத்தனை மாணவர்களுக்கு எத்தனை பேராசிரியர்கள் என்ற விகிதத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது? சட்டக் கல்லூரிகளில் எத்தனை ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது, அதில் எத்தனை காலியாக உள்ளது? என்பது குறித்து உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கின் விசாரணையை அக்டோபர் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“