ராமநாதபுரம் மாவட்டத்தில் உதவி வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்தவர் கிருஷ்ணன். இவர், தனது பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியலில் பெயர் சேர்க்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதன் பின்னணியில், 2003 ஆம் ஆண்டு முதல் பதவி உயர்வு பெற்றவர்களின் பட்டியலில், தனது பெயரை முன்பாக சேர்க்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, 03.07.2024 அன்று, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதற்கான பரிந்துரை அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், வருவாய் துறை செயலாளர் அனுமதியுடன் ஆறு வாரத்திற்குள் இறுதி ஆணை பிறப்பிக்கவும் உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவை அமல்படுத்தாததை கருத்தில் கொண்டு, கிருஷ்ணன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி பட்டு தேவானந்த், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.
இதனையடுத்து, நேற்று வெள்ளிக்கிழமை (மார்ச் 28) ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நேரில் ஆஜரானார். அப்போது, அரசு தரப்பில் வழக்கை விரைந்து விசாரணை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும், நீதிபதி, "சட்டத்திற்கு முன் அனைவரும் சமமே; வழக்கு வரிசைப்படி வரும்" என்று தெரிவித்து, மாவட்ட ஆட்சியரை காத்திருக்கச் செய்தார். இதனால், காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் காத்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, நீதிபதி, "வருவாய் துறை செயலாளருக்கு பதிலாக நீங்கள் எப்படி பதில் மனு தாக்கல் செய்யலாம்? நீதிமன்ற விதிகளை பற்றி தெரியாமல் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?" என கேள்வி எழுப்பினார். மேலும், "நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே மதிக்க வேண்டுமா?" எனவும் காட்டமாக தெரிவித்து, வழக்கை நீதிபதி பட்டு தேவானந்த், தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.