க.சண்முகவடிவேல்
திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் அருகே உள்ள ரேஸ்கோர்ஸ் சாலையில் எஸ்.ஆர்.எம் ஹோட்டல் இயங்கி வருகிறது. எஸ்.ஆர்.எம் நிர்வாகத்துக்கு ஹோட்டல் நடத்த சுற்றுலாதுறை வழங்கிய குத்தகை காலம் நேற்றுடன் (13.06.24) முடிவடைந்த நிலையில், அதனை கையகப்படுத்த இன்று அதிகாரிகள் காவல்துறை துணையுடன் எஸ்.ஆர்.எம் ஹோட்டலை முற்றுகையிட்டனர்.
அண்ணாமலை கண்டனம்
இதற்கு பா.ஜ.க கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து அண்ணாமலை பேசுகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டலை மூடும் முயற்சியில், தி.மு.க அரசு ஈடுபட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
"அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, திருச்சியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் எஸ்.ஆர்.எம். ஹோட்டலை மூடும் முயற்சியில், திமுக அரசு ஈடுபட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எஸ்.ஆர்.எம். ஹோட்டல் குழுமத்தின் நிறுவனர் பாரிவேந்தர், பெரம்பலூர் தொகுதியில் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவை எதிர்த்துப் போட்டியிட்ட காரணத்துக்காகப், பழிவாங்கும் நடவடிக்கையில் தி.மு.க ஈடுபட்டுள்ளது.
அரசுக்குச் சொந்தமான இடத்தை, 1994 ஆம் ஆண்டு முறையாக குத்தகை பெற்று, சுமார் 30 ஆண்டுகளாக ஹோட்டல் நடத்தி வரும் எஸ்.ஆர்.எம்.குழுமத்தினை, உடனடியாகக் காலி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவது முற்றிலும் ஜனநாயக விரோதமானது. எஸ்.ஆர்.எம். குழுமத்தால் கட்டப்பட்ட ஹோட்டல் கட்டிடங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பை இடிக்கத் திட்டமிட்டுள்ளதா தி.மு.க அரசு?
எஸ்.ஆர்.எம். நிறுவனம், குத்தகைக் காலத்தை நீட்டிக்கக் கோரி மூன்று முறை மனு அளித்தும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புறக்கணித்து வந்திருக்கிறது தி.மு.க அரசு. எனவே, இது தொடர்பாக எஸ்.ஆர்.எம்.குழுமம் நீதிமன்றத்திடம் முறையிட்டு, அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கையில், தி.மு.க அரசு உள்நோக்கத்தோடு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.
/indian-express-tamil/media/post_attachments/8d3f4b2e-3a8.jpg)
தி.மு.க ஆட்சியில், அதன் நிர்வாகிகள் குறுநில மன்னர்கள் போல் செயல்படுவது வாடிக்கையானது. காலாகாலமாக, நில ஆக்கிரமிப்புகளும், கட்டப்பஞ்சாயத்தும், அத்துமீறல்களும், தி.மு.க ஆட்சியின் ஒரு அங்கமாகவே விளங்கி வருகின்றன. ஆட்சி அதிகாரத் திமிரில், அரசியல் காரணங்களுக்காக மற்றவர்களைப் பழிவாங்குவது தி.மு.க-வுக்கு வழக்கமானது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக, கூட்டணிக்கு வரவில்லை என்பதற்காக, மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மண்டபத்தை இடித்துப் பழி தீர்த்துக் கொண்ட தி.மு.க, இன்றும் திருந்தவில்லை என்பதே தற்போது திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டலைக் கைப்பற்ற நடக்கும் முயற்சி நிரூபிக்கிறது.
கடந்த 2006 - 2011 ஆட்சிக் காலத்தில், இது போன்ற அராஜகச் செயல்பாடுகளால்தான், தி.மு.க-வை மக்கள் 10 ஆண்டுகள் தூக்கி எறிந்தார்கள் என்பது சிறிதேனும் நினைவில் இருக்குமேயானால், பொதுமக்களின் வாக்குகள் மீது பயம் இருக்குமேயானால், மீண்டும் அதே போன்ற அநியாயமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். ஆனால், மக்கள் நலன் குறித்த அக்கறை சிறிதும் இன்றிச் செயல்படும் மூன்று ஆண்டு கால இருண்ட ஆட்சியால், மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என்பது நன்கு தெரிந்ததால், முடிந்த வரை குடும்பத்துக்காகச் சுருட்டுவோம் என்ற நோக்கத்தில் மட்டுமே செயல்படும் திமுக, திருந்த வாய்ப்பே இல்லை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியிருக்கிறது.
சாமானிய பொதுமக்கள், மாண்புமிகு நீதிமன்றம் மீது கொண்டுள்ள நம்பிக்கையைச் சிதைப்பதைப் போல நடந்து கொள்ளும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். வழக்கு நிலுவையில் இருக்கையில், மாண்புமிகு நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயல்படும் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்தார்.
ஜி.கே.வாசன் கருத்து
இந்த விவகாரம் குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "திருச்சி எஸ்.ஆர்.எம். நட்சத்திர ஹோட்டல் மீது தமிழக சுற்றுலா வளர்ச்சிக்கழகம் நடவடிக்கை எடுக்க முயற்சிப்பது தேவையற்றது. அதாவது ஹோட்டலுக்கான குத்தகை சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசரம் தமிழக அரசுக்கு இல்லை.
குறிப்பாக ஹோட்டலுக்கு கால அவகாசம் வழங்குவது குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளதால் இது சம்பந்தமான நடவடிக்கைகளில் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஈடுபட முனைந்தது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். காரணம் ஹோட்டலில் தங்கி இருக்கும் வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களுக்கு சிரமத்தையும், மன வேதனையையும் ஏற்படுத்தும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
ஐகோர்ட் உத்தரவு
இதனிடையே, ஹோட்டல் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், 'ஹோட்டலை அரசு கையகப்படுத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்' என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி, 'வரும் 18-ம் தேதி செவ்வாய்க்கிழமை வரை ஹோட்டலை கையகப்படுத்தக் கூடாது' என உத்தரவு பிறப்பித்தார்.
காலை முதல் ஹோட்டலை கையகப்படுத்த வந்த சுற்றுலாத்துறை அதிகாரிகள் உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான இடத்தில் எஸ்.ஆர்.எம் நிர்வாகத்தினர் அமைத்துள்ள ஹோட்டலை கையகப்படுத்த வந்த அதிகாரிகளாலும், அதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் பா.ஜ.க மற்றும் ஐ.ஜே.கே கட்சியின் முக்கிய பிரமுகர்களாலும் அந்த அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“