பா.ஜ.கவில் இருந்து 200 நிர்வாகிகள் நீக்கப்பட்டது தொடர்பாக மாநிலத் தலைவர் அண்ணாமலை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மதுரை மாநாகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் மகா.சுசீந்திரன் அதிருப்தி தெரிவித்து பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக பா.ஜ.கவில் மதுரை மாவட்டம் தற்போது மதுரை மாநகர், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு என மூன்றாகப் பிரிக்கப்பட்டு தலைவர்கள் உள்ளனர். முன்பு புறநகர் மாவட்டம் இருந்த போது அதற்கு தலைவராக பல ஆண்டுகள் பதவி வகித்த மகா.சுசீந்திரன் மதுரை மாநகர் மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டார். மதுரை கிழக்கு, மேற்கு மாவட்டத்திற்கு வேறு தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.
மதுரை புறநகர் மாவட்டம் இருந்தபோது மதுரை கிழக்கு, மேற்கு மாவட்டங்கள் புறநகர் மாவட்டத்தில் இருந்தன. அப்போது புறநகர் மாவட்ட தலைவராக இருந்த மகா.சுசீந்திரன் தனது ஆதரவாளர்களை கட்சி நிர்வாகிகளாக நியமித்தார். மதுரை கிழக்கு, மேற்கு மாவட்டத்துக்கு புதிய தலைவர்கள் பொறுப்பேற்றதும் ஏற்கெனவே நிர்வாகிகளாக இருந்த மகா.சுசீந்திரனின் ஆதரவாளர்கள் பலர் நீக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். குறிப்பாக, மதுரை கிழக்கு மாவட்டத்தில் மகா.சுசீந்திரன் ஆதரவாளர்கள் பலர் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதில் அதிருப்தி அடைந்த சுசீந்திரன் கட்சித் தலைமைக்கு புகார் அனுப்பி உள்ளார். புகார் குறித்து நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து இந்த செயலை விமர்சிக்கும் வகையில், மகா.சுசீந்திரன் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக தலைவர்கள் கட்சியின் கடைக்கோடி தொண்டர்களை தேர்வுசெய்து பல்வேறு பொறுப்புகளை கொடுத்து அலங்கரிக்கின்றனர்.
இதை சரியாக பயன்படுத்திவர்கள் குடியரசுத் தலைவர் பதவி வரை பெற்றுள்ளனர். ஆனால், மதுரை வருவாய் மாவட்டத்தில் சில முக்கிய நிர்வாகிகள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல் செயல்படுவதுடன் தங்களை சிவனும், பார்வதியும் நேரடியாக பதவியில் அமர்த்தியதாக நினைத்துக் கொண்டு பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுக்குள் 200 பேரை பொறுப்புகளிலிருந்து நீக்கியுள்ளனர். கட்சிக்கொடியை காரில் கட்டக்கூடாது என போலீஸில் புகார் செய்து கழற்றச் செய்துள்ளனர்.
எல்லா இடங்களிலும் பாஜக, எல்லோரிடத்திலும் தாமரை என்ற கோஷத்தை பாஜக ஊட்டி வளர்த்து வருவதை கூட மறந்து தொண்டர்களை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவது கட்சி சித்தாந்தத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும் எதிரானது. இது தெரிந்தும் மாநிலத் தலைமை தொடர்ந்து மவுனமாக இருப்பது உழைத்த தொண்டர்களின் மன வேதனையை உச்சமாக்கி வருகிறது. எனவே, இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட தொண்டர்களுக்கு மாநிலத் தலைமை குழு அமைத்து ஆறுதல் கூற முன்வர வேண்டும்.
இது, வரும் தேர்தல்களில் கட்சி எழுச்சியுடன் செயல்பட உதவியாக இருக்கும்,” என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். மகா.சுசீந்திரன் இந்த அறிக்கைமதுரை பா.ஜ.கவில் சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“