பா.ஜ.க மாவட்ட நிர்வாகி மதுரையில் இன்று (பிப்ரவரி 15) அதிகாலை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்ட பா.ஜ.க ஓ.பி.சி அணி மாவட்ட செயலாளர் சக்திவேல் (34). இவர் வண்டியூர் பகுதியில் அரிசி அரைக்கும் மாவு மில் ஒன்று நடத்துகிறார். இதன்மூலம் அரசி மாவு பார்சல்கள் செய்து பிற இடங்களுக்கு அனுப்பி விற்கிறார்.
இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் தனது மில்லில் இருந்து, வண்டியூர் சங்கு நகர் வழியாக ரிங் ரோடு நோக்கி டூவீலரில் சென்றார். ரிங் ரோடு ஏறும் இடத்திற்கு முன்பாக காலியிடத்தில் 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்துள்ளது. அந்த கும்பல், அவரை பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி, படுகொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து அண்ணா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கொலை செய்யப்பட்ட சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அண்ணாநகர் போலீசார், சக்திவேலை கொலை செய்த கும்பலை தேடி வந்தனர். முதற்கட்ட விசாரணையில், பணம் கொடுக்கல், வாங்கல் காரணமாக கொலை நடந்திருப்பது தெரிந்தது. விசாரணையைத் தொடர்ந்து மதுரை கல்மேடு பகுதியை சேர்ந்த அண்ணன், தம்பியை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், ”சக்திவேல் ரேசன் அரிசியை வாங்கி, ரைஸ்மில் மூலம் அரைத்து, மாவு பார்சல்களாக தயாரித்து விற்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். மேலும், பணம் கொடுக்கல், வாங்கல் தொழிலும் செய்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு பா.ஜ.க ஓ.பி.சி பிரிவில் மாவட்ட செயலாளராக இணைந்து பணியாற்றினார். இவரிடம் பணிபுரிந்த கல்மேடு பகுதியைச் சேர்ந்த மருது (27) அவரது தம்பி சூரியா (எ) ரஞ்சித்குமார் (24) ஆகியோரிடம் பணம் கொடுக்கல், வாங்கலில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
சக்திவேலுவிடம் சில நாளுக்கு முன் ரூ.70,000 மருது கடன் வாங்கி இருக்கிறார். இதை திருப்பி கொடுப்பதில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மருது ரூ.20,000 திருப்பி கொடுத்துள்ளார். மீதம் ரூ. 50,000 கொடுக்க முடியாத நிலையில், மருதுவின் மனைவி பற்றி சக்திவேல் தவறாக பேசி இருக்கிறார். இது மருதுவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சக்திவேலை கொலை செய்ய மருது திட்டமிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து சக்திவேலின் நடமாட்டத்தை மருது கண்காணித்துள்ளார். இதன்படி மருது தனது தம்பி ரஞ்சித் குமார் மற்றும் 2 பேருடன் சேர்ந்து கொல்ல தேதி குறித்துள்ளனர். இரவு மில்லில் பணி முடிந்து அதிகாலையில் வீட்டுக்கு திரும்பும்போது, ரிங் ரோடு பகுதியில் வைத்து கொலை செய்துள்ளனர். அரசியல் மோதல் எதுவுமில்லை. தனிப்பட்ட பிரச்னையில் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை வழக்கில் மருது, ரஞ்சித்குமார் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது நண்பர்களை தேடி வருகிறோம்" என்று தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“