மதுரை தெற்கு வாசல் பகுதியில் கணவர் கண் முன்னே மனைவியிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் மக்களுடைய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரத்திற்குள் மட்டும் இரண்டு திருட்டு சம்பவங்கள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை தெற்குவாசல் - கீழ வாசல் சந்திப்பு இடையே உள்ள திருமலைநாயக்கர் மஹால் அருகே உள்ள பந்தடி பகுதியைச் சேர்ந்தவர் துவாரகநாத் - மஞ்சுளா தம்பதியினர். இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தன்று மதுரை மாட்டுத்தாவணி மற்றும் கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு கடைகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்கிவிட்டு வீட்டிற்கு இரவு இருசக்கர வாகனத்தில் வந்தனர். இந்த நிலையில் கணவர் வாகனத்தை நிறுத்தி மனைவி வாகனத்தில் இருந்து கீழே இறங்கும்போது அவரை பின்தொடர்ந்து விலை உயர்ந்த R15 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் மஞ்சுளா கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை பறிக்க முற்பட்டனர்.
தனது கழுத்தில் இருந்த முன்றே முக்கால் பவுன் தங்க செயினை பறிக்க முயன்றதில் மஞ்சுளா செயினை கெட்டியாக பிடித்துக்கொண்டதால் இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் மஞ்சுளவை தரதர என சாலையில் இழுத்தவரே வாகனத்தில் வேகமாக இயக்கி சென்றனர். இதில் செயின் இரண்டாக உடைந்து ஒரு பகுதி கொள்ளையர்கள் கையிலும், மற்றொரு பாகம் மஞ்சுளா கழுத்திலும் இருந்தது.
தற்போது இச்சம்பவத்தினுடைய சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்தும்போது பின் தொடர்ந்த மர்ம கும்பல் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக தெற்கு வாசல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விலையுயர்ந்த R15 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி இருசக்கர வாகனத்தின் அடையாளங்களை கண்டறிந்து செயின் பறிப்பில் ஈடுபட்டது யார்? என்பது குறித்தும் தற்போது தெற்குவாசல் போலீசார் விசாரணை தீவிர படுத்தியுள்ளனர்.
இதேபோல் மற்றொரு சி.சி.டி.வி காட்சியில் பந்தடி 7 வது தெருவை சேர்ந்த ஒரு வீட்டில் கணவன் மனைவி இருவரும் அறையில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது அவ்வழியாக சென்ற இரண்டு சிறார்கள் வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல் நுழைந்து சாவகாசமாக வீட்டிலிருந்து வெளியே வரும் சி.சி.டி.வி காட்சியும் வெளியாகி உள்ளது. அதில் சிசிடிவியை பார்த்து அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் வீட்டை சோதனை செய்தபோது வீட்டில் இருந்த 3000 ரூபாய் பணம் திருடு போனதும் தெரிய வந்துள்ளது.
மேலும், தொடர்ச்சியாக தீபாவளி பண்டிகை முன்னிட்டு கீழவாசல் மற்றும் தெற்கு மாசி வீதிகள் விளக்குத்தூண் ஆகிய பகுதிகளில் ஏராளமானோர் கடை அமைத்து இருப்பதால் இப்பகுதிகளில் ஏராளமானோர் வந்து செல்லக்கூடிய நிலையில், கடந்த ஒரு வாரத்திற்குள் இரண்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சக்திசரவணன், மதுரை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.