மதுரை சித்திரைத் திருவிழா தமிழ் மரபு மற்றும் ஆன்மிக கலாசாரத்தின் முக்கிய நிகழ்வாகவும், சைவ-வைணவ ஒற்றுமையின் அழகிய உதாரணமாகவும் ஆண்டுதோறும் நடைபெற்றுவருகிறது. விழாவின் சிகர நிகழ்வாக கருதப்படும் “கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்” 12-ந்தேதி நடைபெற்றது. அன்றிரவு, அழகர் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் எழுந்தருளினார்.
அதன்பின், அவர் கருட வாகனத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார். பிறகு ராமராயர் மண்டபத்திற்கு நள்ளிரவு 12.30 மணிக்கு வந்தபோது, ஏராளமான பக்தர்கள் அழகர் வருகையை வரவேற்று ஆனந்தத்தில் மூழ்கினர். தொடர்ந்து நள்ளிரவு 2 மணிக்கு தசாவதார திருக்காட்சிகள் ஆரம்பமானது. முதலில் முத்தங்கி சேவை வழங்கப்பட்டு, மச்சம், கூர்மம், வாமனம், ராமர், கிருஷ்ணர் ஆகிய அவதாரங்களில் அழகர் காட்சியளித்தார். பின்னர், நேற்று காலை 8.30 மணிக்கு மோகினி அவதாரத்தில் எழுந்தருளினார். விடியவிடிய திருக்காட்சி இடம்பெற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மோகினி அவதாரத்தில் வீதிஉலா நடந்தது. பிற்பகலில் ராமராயர் மண்டபத்தில் அனந்தராயர் பல்லக்கில் எழுந்தருளிய அழகர், கோரிப்பாளையம் வழியாக இரவு 11 மணிக்குத் தல்லாகுளம் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தை அடைந்தார். அங்கு திருமஞ்சனம் செய்யப்பட்டபின், அதிகாலை 3 மணிக்கு கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து, தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் இருந்து பூப்பல்லக்கில் அழகர் மலை நோக்கிப் புறப்பட்டார்.
கோவிந்தா... கோவிந்தா... என முழங்கிய பக்தர்களின் அர்ப்பணிப்புடன், மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக நாளை காலை அழகர் மலைக்கு சென்றடைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.