தேவர் ஜெயந்தி விழாவையொட்டி, மதுரை மாநகரில் வருகின்ற செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மதுரை மாநகரக் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, செவ்வாய், புதன்கிழமைகளில் (அக்டோபர் 29, 30) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இரு நாட்களும் லாரிகள், கனகர வாகனங்கள் காலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை நகருக்குள் நுழைய தடை செய்யப்படுகிறது. தேவர் ஜெயந்தி விழாவுக்கு வரும் வாகனங்களைத் தவிர, மற்ற வாகனங்கள் தேவர் சிலை நோக்கி வரும் சாலைகளில் செல்வதற்கு அனுமதி இல்லை.
நத்தம் சாலை, அழகர்கோவில் சாலை ஆகிய பகுதிகளிலிருந்து தேவர் ஜெயந்தி விழாவுக்காக, ராமநாதபுரம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் பெரியார் சிலை பகுதியில் திரும்பி மாற்றுப் பாதையாக ராஜா முத்தையா மன்றம், கே.கே.நகர் ஆர்ச், ஆவின் சந்திப்பு, அண்ணாநகர் பிரதான சாலை, பி.டி.ஆர் பாலம், வைகை தென்கரை சாலை, விரகனூர் ரவுண்டானா வழியாகச் செல்ல வேண்டும்.
மாட்டுத்தாவணி, ஆவின் சந்திப்பு ஆகிய பகுதிகளிலிருந்து நத்தம் சாலைக்கு வரும் அரசு நகரப் பேருந்துகள், பொதுமக்கள் வாகனங்கள் ராஜா முத்தையா மன்றம், தாமரைத் தொட்டி சந்திப்பு வழியாக புது நத்தம் சாலையில் செல்ல வேண்டும்.
மாட்டுத்தாவணியிலிருந்து நகருக்குள் செல்லும் வாகனங்கள் அனைத்தும் கே.கே.நகர் ஆர்ச், ஆவின் சந்திப்பு, குருவிக்காரன் சாலை சந்திப்பு ரவுண்டானா, கணேஷ் திரையரங்கு சந்திப்பு வழியாக, முனிச்சாலை சந்திப்புக்கு சென்று, இடதுபுறம் திரும்பி, பழைய குயவர்பாளையம், செயின்ட் மேரீஸ் சந்திப்பு, தெற்கு வெளி வீதி வழியாக நகருக்குள் செல்ல வேண்டும்.
முனிச்சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, முனிச்சாலை சாலை வழியாக அம்சவள்ளி சந்திப்பு, நெல்பேட்டை, அண்ணா சிலை, யானைக்கல், வடக்கு மாரட் வீதி, மாடான் லாட்ஜ் சந்திப்பு, வடக்கு வெளி வீதி வழியாக நகருக்குள் செல்ல வேண்டும். குருவிக்காரன் சாலை சந்திப்பு ரவுண்டானா சந்திப்பு, வைகை தென்கரை சாலை, ஒபுளா படித்துறை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, சந்தைபேட்டை சந்திப்பு, முனிச்சாலைசாலை, அம்சவள்ளி சந்திப்பு, நெல்பேட்டை, அண்ணா சிலை, யானைக்கல், வடக்குமாரட் வீதி, மாடர்ன் லாட்ஜ் சந்திப்பு, வடக்குவெளி வீதி வழியாக நகருக்குள் செல்ல வேண்டும். குருவிக்காரன் சாலை சந்திப்பு ரவுண்டானா, வைகை தென்கரை சாலை, யானைக்கல் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வடக்குமாரட் வீதி, மாடர்ன் லாட்ஜ் சந்திப்பு, வடக்குவெளி வீதி வழியாக நகருக்குள் செல்ல வேண்டும்.
வடக்கு வெளி வீதியிலிருந்து யானைக்கல், புதுப்பாலம் வழியாக வரும் பொது வாகனங்கள், பாலம் ஸ்டேசன் சாலை, எம்.எம். லாட்ஜ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கான்சாபுரம் சாலை, ஏ2ஏ2 சாலை, அரசன் ஸ்வீட்ஸ், பெரியார் மாளிகை வழியாகச் செல்ல வேண்டும்.
மேலமடை பகுதியிலிருந்து கோரிப்பாளையம் நோக்கி நகருக்குள் வரும் பொது வாகனங்கள் ஆவின் சந்திப்பு, குருவிக்காரன் சாலைசந்திப்பு, கணேஷ் திரையரங்கு சந்திப்பு,காமராஜர் சாலை வழியாக நகருக்குள்செல்ல வேண்டும்.
தேவர் ஜெயந்தி விழாவுக்காக பசும்பொன் செல்லும் பிற மாவட்ட வாகனங்கள் நகருக்குள் செல்ல காவல் துறையால் அனுமதிக்கப்பட்ட வாகனங்களைத் தவிர, இதர வாகனங்கள் நகருக்குள் வராமல் சுற்றுச்சாலை வழியாகச் செல்ல வேண்டும். கோரிப்பாளையம் தேவர் சிலை சந்திப்புக்குச் செல்ல எந்த ஒரு இரு சக்கர வாகனத்துக்கும் அனுமதி இல்லை.
இந்த விழாவுக்கு வரக்கூடிய இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் தமுக்கம் மைதானம், அண்ணா பேருந்து நிலையம், எம்.எம்.லாட்ஜ் சந்திப்பு ஆகிய இடங்களில் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“