மூத்த அரசியல் தலைவர் பழ.நெடுமாறன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.
முத்துராமலிங்கத் தேவரின் 116-வது குருபூஜையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, மதுரையில் உள்ள பழ நெடுமாறனின் வீட்டுக்குச் சென்ற ஸ்டாலின், அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
இந்த சந்திப்பின்போது, நெடுமாறனின் குடும்பத்தினர், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பு குறித்து பேசிய பழ நெடுமாறன், ‘முதல்வர் ஸ்டாலின் இன்று ஏகப்பட்ட வேலைகள், நிகழ்ச்சிகள் இருந்தும் கூட அதற்கு நடுவில் உடல் நலமின்றி இருக்கும் என்னை வந்து சந்தித்தது என்னுடைய உள்ளத்தை மிகவும் நெகிழ வைக்கிறது.
2002 ஆம் ஆண்டு பொடா சட்டத்தின் கீழ் நான் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் நான் இருந்தபோது வேறொரு போராட்டத்தில் ஸ்டாலினும், அவரது தோழரும் அன்றைக்கு கைது செய்து அதே சிறையில் கொண்டு வந்து வைத்தார்கள்.
ஒரே பிளாக்கில் நாங்கள் இருக்கக் கூடிய சூழ்நிலை. கிட்டத்தட்ட 15 நாட்கள் அங்கு தங்கியிருந்தார்.
பல்வேறு கட்டங்களில் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அவர் என்மீது அன்பும், மதிப்பும் காட்டி இருக்கிறார். இந்த சூழலில் அவரும் சக அமைச்சர்களோடு என்னை வந்து சந்தித்தது ஆறுதலுக்குரியது. என்றும் மறக்க முடியாதவை. அவருக்கு என்றும் என்னுடைய நன்றி… என்று உணர்ச்சி பொங்க கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“