/indian-express-tamil/media/media_files/2025/01/18/UkX7EYen3BSJoQsfr2Ua.jpg)
சாதி, மதம் போன்ற எவ்வித விவரங்களும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்களிடம் கேட்பதில்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்தார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பாண்டியை ஒட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி பரபரப்பாக நடந்து முடிந்தது. இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதோடு பல சர்ச்சைகளும் எழுந்தது.
குறிப்பாக பாலமேடு ஜல்லிக்கட்டில் சாதி பாகுபாடு காரணமாக தன்னை மாடுபிடிக்க அனுமதிக்கவில்லை எனவும், காவல்துறையினர் தன்னை தாக்கியதாகவும் தமிழரசன் என்ற மாடுபிடி வீரர் குற்றம் சாட்டியிருந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும், சமூகவலைதளங்களில் பரவி, கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக 2025 ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி அவனியாபுரம் (14.01.2025), பாலமேடு (15.01.2025) மற்றும் (16.01.2025) ஆகிய தினங்களில் நடைபெற்றது. மேற்படி ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேற்படி நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களின் உடற்தகுதி மற்றும் அவசர காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்கள் மட்டுமே ஆன்லைன் விண்ணப்பத்தில் கோரப்படுகிறது. இதில் இனம், மதம் போன்ற எவ்வித விவரங்களும் கோரப்படுவதில்லை. போட்டியில் பங்கேற்க வரும் மாடுபிடி வீரர்களை மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு சுற்றுக்கு 50 நபர்கள் வீதம் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேலும், கடந்த 15.01.2025 அன்று பாலமேடு கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் ஜாதி பாகுபாடு காரணமாக தமிழரசன் என்பவர் கலந்துக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும், தனது டோக்கன் எண் 24 என்றும் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் தமிழரசன் என்பவரின் டோக்கன் எண் 204, மேலும் அவர் போட்டிக்கு தாமதமாக வந்ததால் 9 -வது சுற்றில் களமாட இருந்தார் (401-450 நபர்கள்) 8-வது சுற்று முடிக்கப்பட்டபோது மழை மற்றும் நேரமானதால் இறுதியாக சிறந்த மாடுபிடி வீரர்களுக்கான சுற்று மட்டும் நடத்தப்பட்டு, 9-வது சுற்று நடத்தப்படாமல் நிகழ்ச்சி முடிக்கப்பட்டது. தமிழரசன் என்பவர் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது உண்மைக்கு புறம்பானவை" என்று மதுரை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.