150 கட்டிடங்களுக்குச் சொத்துவரியைக் குறைத்து முறைகேட்டில் ஈடுபட்ட வரி வசூலிக்கும் ஊழியர்கள் 5 பேரை மதுரை மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் தற்காலிகப் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த முறைகேடு சம்பவத்தால் மாநகராட்சிக்கு ரூ.1.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியின் 5 மண்டலங்களில் உள்ள 100 வார்டுகளில் வீடுகள், வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் உள்ளன. மாநகராட்சி வருவாய்த் துறை அதிகாரிகள், இந்தக் கட்டிடங்களுக்குச் சொத்துவரி நிர்ணயம் செய்து, 6 மாதங்களுக்கு ஒருமுறை சொத்துவரி வசூலிப்பது வழக்கம். ஒவ்வொரு வார்டிலும் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களை, அந்தந்த மண்டல உதவி வருவாய் அலுவலர்கள் தலைமையில் வரி வசூல் ஊழியர்கள் (பில் கலெக்டர்கள்) கண்காணித்து நேரடியாகச் சென்று அளந்து சொத்து வரியை நிர்ணயம் செய்கின்றனர்.
கடந்த காலங்களில், புதிய கட்டிடங்களுக்கு வரி வசூலிக்கும் ஊழியர்கள் சொத்துவரி நிர்ணயம் மற்றும் வரி வசூலை அதிகாரிகள் பெரியளவில் கண்காணிக்காமல் இருந்துள்ளனர். அதனால், வரி வசூலிக்கும் ஊழியர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு கட்டிடங்களுக்கு குறைவாகச் சொத்து வரி நிர்ணயம் செய்வதும், அரசியல் பின்னணியில் உள்ளவர்களிடம் சொத்து வரியை வசூலிக்காமலேயே ஏமாற்றியும் வந்துள்ளனர்.
இந்நிலையில் மாநகராட்சி ஆணையராக தினேஷ்குமார் வந்தபிறகு, சொத்து வரி வசூல் நிலவரம், புதிதாக சொத்து வரி நிர்ணயம் செய்த கட்டிடங்களை மாநகராட்சி மைய அலுவலகத்தில் வாரந்தோறும் ஆய்வுசெய்து வரும் நிலையில், ஆய்வுக் கூட்டங்களில் துணை ஆணையர்கள், வருவாய்த்துறை உதவி ஆணையர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், வரி வசூலிக்கும் ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை சொத்து வரியை ஆன்லைனில் ஆய்வு செய்தபோது திடீரென சில கட்டிடங்களை சொத்து வரி நிர்ணயம் செய்தது தொடர்பான தகவல்கள் காணவில்லை. அந்தக் கட்டிடங்களை ஆய்வு செய்தபோது, சொத்து வரியை முறைகேடாக குறைத்தது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த அவர், மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் 2 உதவி ஆணையர்கள் தலைமையில் சிறப்புக் குழுவை அமைத்து அனைத்து கட்டிடங்களுக்கான சொத்து வரியை ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.
அதன் தொடர்ச்சியாக முதற்கட்டமாக சொத்து வரி நிர்ணயம் செய்ததில் முறைகேடு செய்த 76-வது வார்டு வரி வசூலிக்கும் ஊழியர் கே.ராமலிங்கம் (மண்டலம்-3), பி.மாரியம்மாள் (5-வது மண்டலம் இளநிலை உதவியாளர்), 6-வது வார்டு பி.ரவிச்சந்திரன் (1-வது மண்டலம்), 64-வது வார்டு வரி வசூலிக்கும் ஊழியர் எம்.கண்ணன்(2-வது மண்டலம்), 85-வது வார்டு வரி வசூலிக்கும் ஊழியர் பி.ஆதிமூலம் (4-வது மண்டலம்) ஆகியோரை ஆணையர் தினேஷ்குமார் தற்காலிகப் பணி நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், புதிதாக சொத்துவரி விதிப்பது, வரி வசூலிப்பது போன்ற பணிகளை ஆன்லைனில் ஒரு மென்பொருள் மூலம் வரி வசூலிக்கும் ஊழியர்கள் செய்து வருகின்றனர். புதிதாக ஒரு சொத்துக்கு வரி விதிக்க வேண்டுமெனில், வரிவசூல் ஊழியரின் ஐடியில் இருந்து லாக்இன் செய்து அந்த மென்பொருளில் சொத்து வரி நிர்ணயம் செய்து, அதன்பிறகு இளநிலை உதவியாளர், உதவி வருவாய் அலுவலர், உதவி ஆணையர் ஆகியோரின் ஐடிகளுக்கு செல்லும்.
இவற்றில், சதுர அடி அதிகமாக இருந்தால் துணை ஆணையர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். இந்த முறையில் ஒருமுறை வரி விதித்துவிட்டால், அந்த வரியைக் குறைப்பதற்கு ஒன்று நீதிமன்றம் மூலம் ஆணை பெற்று வர வேண்டும் அல்லது மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் வைத்துதான் குறைக்க முடியும். ஆனால், இந்த நடைமுறையைப் பின்பற்றாமல் மாநகராட்சி 5 மண்டலங்களில் மொத்தம் 150 கட்டிடங்களுக்கு சொத்து வரியை வரி வசூல் ஊழியர்களே குறைத் துள்ளார்கள்.
இந்த 150 கட்டிடங்களுக்கு 6 மாதங்களுக்கு மாநகராட்சிக்கு வர வேண்டிய சொத்து வரி ரூ.25 லட்சத்தைக் குறைத்துள்ளனர். 2022, 2023-ம் ஆண்டுகளில் இந்த முறைகேடு நடந்துள்ளது. ஒட்டு மொத்தமாக இந்த முறைகேட்டால் மாநகராட்சிக்கு ரூ.1.50 கோடி சொத்து வரி இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.