/indian-express-tamil/media/media_files/2025/02/27/WObeBseBLjSZNRu7dBQi.jpg)
மதுரை மாநகராட்சி கோட்டத்தில் 67 தி.மு.க. கவுன்சிலர்களில் 31 பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர். மீதமுள்ள 36 தி.மு.க. கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை.
மதுரை மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் இன்று மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், துணை மேயர் நாகராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் மதுரையில் 24 இடங்களில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டது.
அ.தி.மு.க. எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா, மாநகராட்சியில் வரிவசூலில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக குழு அமைக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அந்த குழுவின் விசாரணை நிலை குறித்து கேள்வி எழுப்பினார். அதேபோல் கவுன்சிலர் சண்முகவள்ளி, தனது வார்டில் சாக்கடை பிரச்சினை நீடிக்கிறது என்றும், நடவடிக்கை எடுக்காததால் ராஜினாமா செய்வதை தவிர வேறு வழியில்லை என்றும் தெரிவித்தார்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உறுப்பினர் குமரவேல், நகரில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டு, அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார். அதற்கு அதிகாரிகள், மதுரை மாநகரில் சுமார் 38 ஆயிரம் தெருநாய்கள் உள்ளன; தினமும் 24 நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது எனத் தெரிவித்தனர். துணை மேயர் நாகராஜன், தயிர் மார்க்கெட்டில் புதிய காய்கறி கடைகள் கட்டப்பட்டும், கடைகள் ஒதுக்கீட்டில் பிரச்சினை காரணமாக இன்னும் வியாபாரிகள் உள்ளே செல்ல முடியவில்லை என்று கூறினார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பங்கேற்றனர். மாநகராட்சியில் வரிவசூல் முறைகேடு தொடர்பாக மேயர் ராஜினாமா செய்யும் வரை கூட்டங்களில் பங்கேற்கமாட்டோம் என்று அறிவித்திருந்த போதிலும், அவர்கள் கலந்து கொண்டது கவனத்துக்குரியதாகும். மாறாக, 67 தி.மு.க. கவுன்சிலர்களில் 31 பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர். மீதமுள்ள 36 தி.மு.க. கவுன்சிலர்கள் வராதது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.