/indian-express-tamil/media/media_files/2025/06/27/madurai-corporation-commissioner-inquiry-finds-loses-rs-200-crore-in-revenue-tamil-news-2025-06-27-11-59-18.jpg)
மதுரை மாநகராட்சியில் பிரதான கட்டிடங்களுக்கு சொத்து வரி குறைத்து மதிப்பிடப்பட்டதில் நடந்த மிகப்பெரிய முறைகேடு தொடர்பாக, அனைத்து கட்டிடங்களிலும் ஆய்வு செய்ய குழுக்களை அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மதுரை மாநகராட்சி ஆணையர் பதில் மனு தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள முக்கிய கட்டிடங்களுக்கு சொத்து வரி குறைத்து மதிப்பிடப்பட்டதன் மூலம் சுமார் ரூ.200 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி ரவி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, அரசு தரப்பு வழக்கறிஞர், கடந்த பத்து ஆண்டுகளாக இந்த முறைகேடு நடந்து வருவதாகவும், இது தொடர்பாக காவல்துறை ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
மாநகராட்சி தரப்பு வழக்கறிஞர், சொத்து வரி குறைத்து மதிப்பிடப்பட்ட விவரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அதன் மூலம் ஏற்பட்ட இழப்பை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேட்டினால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு, இது போன்ற நிலை தமிழகத்தின் பிற உள்ளாட்சி அமைப்புகளிலும் நிலவுவதாக கருத்து தெரிவித்தனர்.
மேலும், நேர்மையாக வரி செலுத்துவோர் இதனால் பாதிக்கப்படுவதாகவும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வர வேண்டிய வருவாய் குறைவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதன் விளைவாக, சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடியாத நிலை ஏற்படுவதாகவும் நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து கட்டிடங்களிலும் உள்ள சொத்து வரி குறித்த ஆய்வை மேற்கொள்ள பல்வேறு குழுக்களை அமைக்க வேண்டும் என மதுரை மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் தனது பதில் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர். இந்த உத்தரவு, மதுரை மாநகராட்சியின் நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் ஒரு முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.