/indian-express-tamil/media/media_files/2025/06/27/madurai-corporation-commissioner-inquiry-finds-loses-rs-200-crore-in-revenue-tamil-news-2025-06-27-11-59-18.jpg)
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட தூய்மை பணியாளர்கள், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (ஆகஸ்ட் 18) முதல் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
மொத்தம் 5 மண்டலங்கள், 100 வார்டுகள் கொண்ட மதுரை மாநகராட்சியில் 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வரும் இவர்கள், தூய்மை பணியை தனியார்மயமாக்கும் அரசாணை எண் 152-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கையாக முன்வைத்து வருகின்றனர்.
மேலும், அரசாணை 62(2D)ன் படி தினசரி ஊதியமாக ரூ.754 வழங்குதல், பணிக்குத் தேவையான உபகரணங்கள் வழங்குதல், தூய்மை பணிகளை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்ததை ரத்து செய்தல், அரசு நேரடியாக தூய்மை பணிகளை மேற்கொள்ளுதல், அரசு அறிவித்துள்ள அனைத்து பண பலன்களையும் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில் 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தனர். அதேபோல், நாளை முதல் மீண்டும் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இந்த போராட்டம், தொழிற்சங்க தொடர்பான விஷயங்களில் தமிழக அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. ஏற்கனவே சென்னையில் தூய்மை பணியாளர்கள் நடத்திய போராட்டத்தை கையாண்ட விதம் தி.மு.க கூட்டணி கட்சிகளின் கடும் விமர்சனங்களை பெற்றது. சி.பி.எம், சி.பி.ஐ கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மறுபுறம், திருமாவளவன் மட்டும் தமிழக அரசின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தியுள்ளார்.
இந்த சூழலில், மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் போராட்டம் தமிழக அரசியல் வட்டாரங்களில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.