/indian-express-tamil/media/media_files/2025/08/19/sanitary-workers-madurai-protest-post-2025-08-19-20-28-03.jpeg)
தமிழகத்தின் மிகப்பெரிய மாநகராட்சிகளில் ஒன்றான மதுரை மாநகராட்சி 100 வார்டுகளை கொண்டது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இங்கு தினசரி சேகரிக்கப்படும் பல டன் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் வார்டு வார்டாக சேகரித்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் சுகாதார பணிகளை தனியார் மயமாக்கும் அரசாணையை எதிர்த்து, சென்னை மாநகராட்சியில் கடந்த வாரம் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மதுரை மாநகராட்சியிலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் நேற்று முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண் பணியாளர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் திரண்டு போராட்டத்தில் கலந்து கொண்டனர். தனியார்மய அரசாணை 152 மற்றும் 139-ஐ ரத்து செய்ய வேண்டும், பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய அரசாணை 62 (31)-ன் படி சம்பளம் வழங்க வேண்டும், அனைத்து பிரிவு பணியாளர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சென்னை தூய்மை பணியாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், காவல்துறை அராஜகத்தை கண்டித்தும் நடைபெற்ற இந்த போராட்டம், நேற்று காலை முதல் இரவு வரை நீடித்தது. மாலை மாநகராட்சி சார்பில் விளக்கக் கடிதம் வழங்கப்பட்டாலும், போராட்டம் தொடர்ந்ததால் இரவு போலீசார் பணியாளர்களை கைது செய்தனர். பின்னர் நள்ளிரவில் விடுவித்தனர்.
இந்தநிலையில் இன்று (ஆகஸ்ட் 19) இரண்டாவது நாளாக மதுரை அவுட்போஸ்ட் அம்பேத்கர் சிலை அருகே தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடர்ந்தது. இதனால் மாநகராட்சி வளாகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாவிட்டால் கைது செய்வோம் என்று போலீசார் எச்சரித்தனர்.
பின்னர் தொழிற்சங்கத்தினர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தலைமையில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அவர்லேண்ட் நிறுவன தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட முத்தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புதல் பெற்றனர். இதையடுத்து, காத்திருப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தொழிற்சங்கம் அறிவித்தது.
இது தொடர்பாக, தூய்மைப் பணியாளர் சங்க பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: “எங்கள் கோரிக்கைகளுக்கு மாநகராட்சி நிர்வாகமும் காவல்துறையும் செவிசாய்க்கவில்லை. உரிமைகளுக்காக போராடுவதை கூட அரசு தடுக்கிறது. முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் நடத்துவோம். எப்போதும் போராட்டத்தில் இருந்து பின்வாங்கமாட்டோம்,” என தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.