அதிவேக பைக் ரைடரான பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசன் கடந்தாண்டு காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக் வீலிங் செய்து விபத்தை ஏற்படுத்தினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் மீது, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக பைக் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, டி.டி.எப். வாசனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் பின்னர், டி.டி.எப் வாசன் புழல் சிறையில் இருந்து கடந்த நவம்பரில் ஜாமீனில் வெளியே வந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகள் ரத்து செய்து உத்தரவிடப்பட்டிருந்தது.
வழக்கு
பைக் ஓட்ட தடை விதிக்கப்பட்ட நிலையில், டி.டி.எப். வாசன் தற்போது கார் மூலம் ஊர் ஊராக சுற்றி வந்து வீடியோ போட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த 15 ஆம் தேதி அன்று, மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் செல்போன் பேசியபடி அஜாக்கிரதையாகவும், கவன குறைவாகவும் பொது மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாகவும் அவர் கார் ஓட்டியுள்ளார். இதையடுத்து, டி.டி.எஃப் வாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கேள்வி
இதன்பின்னர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து அவரை மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு ஆஜர் படுத்த அண்ணாநகர் காவல் நிலையத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். அப்போது காவல்நிலையத்தின் முன்பாக டி.டி.எஃப் வாசன் பேசுகையில், "நான் யாருடைய உயிருக்கு பங்கம் விளைவிக்கவிலை. என் மீது வேண்டுமென்றே பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போதையில் காரை ஒட்டி இரண்டு பேரை கொன்றவர்க்கு பெயில், ஆனால், என் மீது மட்டும் வழக்கா?. சட்டம் என்பது எல்லோருக்குமானது தான். ஆனால் சாலையில் மதுபோதையில் செல்பவர்கள் மீது நடவடிக்கைகள் இல்லை என் மீது மட்டும் போனில் அவுட் ஸ்பீக்கரில் பேசியபோதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் நீதித்துறையை நம்பியுள்ளேன். எனக்கான நீதி எனக்கு கிடைக்கனும் என முழக்கமிட்டார்.
இதுபோல், டி.டி.எஃப் வாசன் நீதிமன்ற வளாகத்தில் சென்றபோது, "என்னைப் பார்த்து தான் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்களா? வீதிக்கு ஒரு டாஸ்மாக் உள்ளது தெரியாதா? எவ்வளவு பேர் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர். குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களுக்கு மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய வழக்கு என்றால் எனக்கு மட்டும் ஏன் கொலை வழக்கு? எனக்கு நீதி வேண்டும்" கேள்வி எழுப்பியபடி சென்றார்.
வாதம்
இதனைத் தொடர்ந்து, மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில், டி.டி.எஃப் வாசனால் எந்தவொரு தனிமனிதனும் பாதிக்கவில்லை, புகாரும் அளிக்கவில்லை. சென்னையில் இருந்து சென்ற போது எந்த காவலரும் விதிமீறல் குறித்து பார்க்கவில்லையா? வீடியோவை பார்த்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். டி.டி.எஃப் வாசனால் பொதுமக்கள் எந்த பாதிப்பும் அடையவில்லை
வாசனுக்கு முதுகுவலி உள்ளது, கண்ணாடி அணிந்து தான் வெளியே செல்ல முடியும். வரும் 4ஆம் தேதி சினிமா பட சூட்டிங் உள்ளது, எனவே நிபந்தனை ஜாமின் வழங்க வேண்டும்." என்று டி.டி.எஃப் வாசன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
ஜாமீன்
படத்தில் நடிக்க இருப்பதால் தனக்கு ஜாமீன் வேண்டும் எனக்கோரி டி.டி.எஃப் வாசன் மனு தாக்கல் செய்த நிலையில், இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.டி.எஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி மதுரை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இனி இதுபோன்று செயலில் ஈடுபட மாட்டேன் என மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட வேண்டும் எனவும் நிபந்தனை விதித்தார்.
மஞ்சள் வீரர் எனும் படத்தில் டி.டி.எஃப் வாசன் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.