மதுரை, தண்டாயுதபாணி கோயிலில் தட்டு காணிக்கையை உண்டியலில் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்ட உத்தரவுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மதுரை, நேதாஜி சாலையில் அமைந்துள்ள தண்டாயுதபாணி கோயில், இந்து அறநிலையத்துறை சட்டப்பிரிவு 46(iii)-60 கீழ் வகைப்படுத்தப்பட்டதாகும். இக்கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
இதனால், பக்தர்கள் அளிக்கும் தட்டு காணிக்கைகள் கோயில் கணக்கில் வரவு வைக்கப்படும் வழக்கம் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த சூழலில், கடந்த 7-ஆம் தேதி கோயிலின் செயல் அலுவலர் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார்.
அதில், தட்டு காணிக்கைகளை உண்டியலில் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த உத்தரவு தன்னிச்சையாக பிறப்பிக்கப்பட்டதாக கருதப்பட்டதால், அதனை கோயிலின் செயல் அலுவலர் திரும்பப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், கோயில் தக்காருடன் ஆலோசனை மேற்கொள்ளாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்காக, சம்பந்தப்பட்ட செயல் அலுவரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக மதுரை மண்டல இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.