மதுரை மாவட்டம், முருகனேரியில் செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். முதல்வர் பழனிசாமி இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார்.
மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், முருகனேரி கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு தயாரிக்கும் ஆலையில், பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் 5 பெண்கள் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் பட்டாசு ஆலையின் 6 அறைகளும் இடிந்து விழுந்தது .
இந்த வெடி விபத்தில் சிக்கிய பட்டாசு தயாரிக்கும் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அய்யம்மாள், சுருளியம்மாள், வேலுத்தாய், லெட்சுமி, காளீஸ்வரி ஆகிய 5 பெண்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பட்டாசு ஆலை வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் மருத்துவமனைக்கு சென்று, பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் காயம் அடைந்தவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மதுரை பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பார். வெடி விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். பட்டாசு ஆலைகள் மாவட்ட நிர்வாகம் கொடுக்கும் அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மதுரை மாவட்டத்தில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து முதல்வர் பழனிசாமி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார்.
மேலும். முதல்வர் பழனிசாமி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த துயரச் செய்தி குறித்து அறிந்தவுடன், மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யவும், இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்யவும் வருவாய்த் துறை அமைச்சருக்கும் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் உத்தரவிட்டுள்ளேன்.
பண்டிகை காலம் விரைவில் வரவிருப்பதால், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தொழிற்சாலைகள் உரிய பாதுகாப்புடனும், கவனமாகவும் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என இத்தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன். மேலும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளை அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு தொழிலாளர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப நிலையினை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும்; பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.” என்று அறிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"