மதுரை அமலாக்கத்துறை அலுவலக சோதனை விவகாரத்தில் தமிழக காவல்துறை அனுப்பிய சம்மனுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர் ஆகவில்லை.
திண்டுக்கல்லை சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ் பாபு. இவருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க, ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை உயரதிகாரியின் உத்தரவின்பேரில் மதுரை தபால் தந்தி நகரிலுள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சத்யசீலன் தலைமையில் அப்பிரிவு சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அலுவலகத்தில் பணிபுரியும் உதவி இயக்குநர் பிரிஜிஷ்ட் பெனிவால் சார்பில், தமிழக டிஜிபிக்கு புகார் கடிதம் அனுப்பி இருந்தது. அதில் ‘மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்துக்குள் லஞ்ச ஒழிப்புத் துறையினர் எனக் கூறி அத்துமீறி நுழைந்தவர்கள் மீதும், தேவையின்றி ஆவணங்களை திருடி சென்றவர்கள் மீதும் மதுரை காவல் ஆணையரிடம் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத்துறை புகார் அளித்திருந்தது.
இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்த மதுரை மாநகர காவல் ஆணையாளருக்கு டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (டிச.26) காலை 11 மணிக்கு மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக காவல்துறை சம்மன் அனுப்பியது.
குறிப்பாக மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அலுவலகத்தில் பணிபுரியும் உதவி இயக்குநர் பிரிஜிஷ்ட் பெனிவால் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று ஆஜர் ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், காவல்துறை சம்மனுக்கு அமலாக்கத்துறை ஆஜர் ஆகவில்லை. உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து பிறகு அடுத்த சம்மன் அனுப்பப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“