மதுரை மாட்டுத்தாவணி அருகே அமைந்துள்ள நினைவு வளைவை (ஆர்ச்) அகற்றும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில், ஜேசிபி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1981ஆம் ஆண்டு ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டின் நினைவாக மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்ட நக்கீரர் தோரண வாயில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதாக கருதப்பட்டது. இதனை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்ததைத் தொடர்ந்து, மாநகராட்சி சார்பில் இடிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நேற்று (பிப்.12) நள்ளிரவில் நடைபெற்ற பணிகளின்போது, திடீரென தூண் சரிந்து விழுந்ததில், மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த ஜேசிபி ஓட்டுநர் நாகலிங்கம் (21) உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் ஒப்பந்ததாரர் நல்லதம்பி காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தகவலறிந்து, இறந்த நாகலிங்கத்தின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், "சிறிய ரக ஜேசிபி பயன்படுத்தியதே உயிரிழப்புக்குக் காரணம்" எனக் கூறினர். இதையடுத்து, காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, நாகலிங்கத்தின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் மாட்டுத்தாவணி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.