முதல்வராக பதவியேற்ற பின்பு மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய சென்றபோது, தனது அண்ணன் மு.க.அழகிரியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த சந்திப்பு நடக்கவே இல்லை. இருந்தாலும் மதுரை திமுக மு.க.ஸ்டாலின் - மு.க.அழகிரி சந்திப்பு எதிர்பார்ப்பை விடாமல் தொடர்ந்து வருகிறது. ஏனென்றால், மு.க.அழகிரி மகன் துரை தயாநிதிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் சின்ன தாத்தாவான மு.க.ஸ்டாலின், பேரக்குழந்தையை பார்க்க மதுரை வருவார் என்றும் அப்போது மு.க.அழகிரியை சந்திப்பார் என்றும் மதுரை திமுகவினர் இடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மறைந்த திமுக தலைவர் உயிருடன் இருந்தபோதே, அவருடைய மகன்களான மு.க.அழகிரிக்கும் மு.க.ஸ்டாலினுக்கு இடையே கட்சியில் ஏற்பட்ட அதிகார போட்டியால் இருவருக்கும் இடையே மோதல் உருவானது. திமுகவின் தென் மண்டலச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதற்குப் பிறகு, கருணாநிதியின் மரணத்தில் சந்தித்துக்கொண்டாலும் இருவருக்கும் பெரிய இணக்கம் எதுவும் இல்லாமலே இருந்தது. திமுகவுக்குள் மீண்டும் நுழைய முடியாமல் வெளியே இருந்துவரும் மு.க.அழகிரி தேர்தலில் தனிக்கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அப்படி எதுவும் செய்யாமல் அமைதியாகிவிட்டார். அதுமட்டுமில்லாமல், மு.க.ஸ்டாலினால் முதல்வராக முடியாது என்றும் விமர்சித்து வந்தார்.
இந்த சூழலில்தான், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக பதவியேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு யாரும் எதிர் பாராத வகையில் மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்தார். முதல்வராக பதவியேற்கும் தனது தம்பியை நினைத்து பெருமைப்படுவதாக தெரிவித்தார். மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவுக்கு மு.க.அழகிரி தனது மகன் துரை தயாநிதி மற்றும் அவருடைய மகளை அனுப்பி வைத்தார்.
மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின்னர், கொரோன தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய மதுரைக்கு சென்றார். அப்போது, மு.க.ஸ்டாலினும் அழகிரியும் சந்திபார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. மீண்டும், மு.க.அழகிரிக்கு திமுகவில் தென் மண்டல பொறுப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சந்திப்பு நடைபெறாததால் மதுரை திமுகவினர் ஏமாற்றத்திற்குள்ளானார்கள்.
மு.க.ஸ்டாலின் அரசு பணி காரணமாக மதுரை வந்ததால் தனிப்பட்ட சந்திப்புகளை நடத்த விரும்பவில்லை என்று திமுக வட்டாரங்கல் தெரிவித்தன.
இந்த நிலையில்தான் 2 வாரங்களுக்கு முன்பு மு.க.அழகிரி மகன் துரை தயாநிதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. துரை தயாநிதிக்கு ஏற்கெனவே ருத்ரதேவ் என்ற ஆண் குழந்தை உள்ளான்.
துரை தயாநிதிக்கு ஆண் குழந்தை பெயர் சூட்டு விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பெயர் சூட்டு விழாவில் அழகிரியும் ஸ்டாலினும் சந்திப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் எழுந்தது. ஆனால், கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக உள்ள முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை. இப்படி, ஸ்டாலின் - அழகிரி சந்திப்பு தள்ளிப்போய்க் கொண்டே போகிறது.
இந்த நிலையில்தான், துரை தயாநிதி சமூக ஊடகங்களில் மனைவி குழந்தையுடன் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு குழந்தையின் பெயரான வேதாந்த் ஏ தயாநிதி என்று குறிப்பிட்டுள்ளார். 2வது குழந்தைக்கு தந்தையாகி இருக்கும் தயாநிதிக்கு சமூக ஊடகங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குழந்தையின் சின்ன தாத்தாவான முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் பேரக்குழந்தையை பார்த்து வாழ்த்த மதுரை செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்விலாவது சகோதரர்கள் ஸ்டாலினும் அழகியும் சந்தித்துக்கொள்வார்கள் என்று மதுரை திமுகவினர் எதிர்பார்க்கின்றனர். ஸ்டாலின் - அழகிரி சந்திப்பு எத்தனை முறை தள்ளிப்போனாலும் நிச்சயம் அவர்கள் சந்திப்பார்கள் என்று மதுரை நம்பிக்கை விடாமல் உள்ளது. ஏனென்றால், பேரப்பிள்ளை பாசம் ஸ்டாலினுக்கும் உண்டு. பேரப்பிள்ளை பாசம் ஸ்டாலினை வரவைக்கும் என்கிறார்கள் மதுரைக்காரர்கள்.
மு.க.ஸ்டாலின் தனது பேரக்குழந்தையை பார்க்க எப்போது செல்வார் என்று விசாரித்தபோது, முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார். அதனால், கொரோனா சிகிச்சை மையங்களையும் ஆய்வு செய்து வருகிறார். அதனால், அவர் குழந்தையை பார்ப்பது அவ்வளவு விரைவில் நடக்குமா என தெரியவில்லை என்கிறார்கல் திமுக வட்டாரத்தினர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.