க.சண்முகவடிவேல்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க பல அணிகளாக பிளவுப்பட்டநிலையில், எடப்பாடி பழனிசாமி கட்சியையும், அதன் சின்னத்தையும் கைப்பற்றினார். எம்.ஜி.ஆர் - ஜெயலலிதாவுக்கு பிறகு, அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் போன்றோர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து, 'அ.தி.மு.க-வை பழனிசாமியிடம் இருந்து மீட்காமல் விடமாட்டோம்' என அவருக்கு எதிராக காய் நகர்த்தி வருகிறார்கள்.
அ.தி.மு.க-வின் 90 சதவீதம் நிர்வாகிகள், பெரும்பான்மை தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருந்தாலும், கட்சியை தாண்டி தமிழக அரசியலில் தனது செல்வாக்கை நிரூபிக்கவும், அடுத்த ஆண்டு வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலுக்கு அ.தி.மு.க-வை தயார்ப்படுத்தக்கூடிய இக்கட்டான நிலையிலும் அவர் உள்ளார்.அதனால், பொதுச்செயலாளராக பொறுப்பேற்றபோதே மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி கட்சியின் மாநில மாநாடு நடத்தப்படுவதாக அறிவித்தார்.
அவர் அறிவித்தபடி மாநாடு ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார், அமைப்பு செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா ஆகிய மும்மூர்த்திகள் முன்னின்று செய்து வருகிறார்கள். மாநாடு நாளை மறுதினம் நடக்க விருக்கும் நிலையில் மதுரை வலையங்குளத்தில் மாநாட்டு பந்தல், வாகனங்கள் நிறுத்தும் இடம், உணவு தயாரிக்கும் கூடங்கள் அமைக்கும் பணிகள் தடபுடலாக நடக்கின்றன. 5 லட்சம் சதுர அடியில் மாநாட்டு பந்தல் அமைக்கும் பணி நிறைவு பெற்றது.
மாநாட்டு மேடை மட்டுமே 20 அடி நீளம், 100 அடி அகலத்தில் டிஜிட்டல் மேடையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேடையில் தலைவர்கள் பேசும்போது, அவர்கள் பேசும் காட்சி நேரலையில் மேடையின் பின்புறம் உள்ள டிஜிட்டல் திரையிலும், மேடை முன் அமர்ந்திருக்கும் தொண்டர்களுக்கு தெரியும் வகையிலும் மாநாட்டு மேடையும், பந்தலும் அமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டு நுழைவு வாயிலில் எம்ஜிஆர், ஜெயலலிதாவும் அவர்களுக்கு கீழே இருவருக்கும் நடுவில் பழனிசாமி இருக்கும் வகையில் அரண்மனை போன்ற தோற்றத்துடன் பின்னணியில் மலை குன்றுகள் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைவர்கள் பேச்சை தொண்டர்கள், பொதுமக்கள் கேட்கும் வகையில் மேடையில் இருந்து கிட்டத்தட்ட 2 கி.மீ தூரத்துக்கு ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு உணவு தயாரிப்பதற்காகவே மாநாட்டு பந்தல் அருகே 35 ஏக்கரில் தனித்தனியாக உணவு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
புளிசாதம், ஊறுகாய் போன்ற முன்கூட்டியே தயாரிக்கக்கூடிய உணவுகள் நேற்று முதல் தயாரிக்கும் பணி தொடங்கியது. 10 லட்சம் தொண்டர்களுக்கு உணவு தயார் செய்யப்படுகிறது. இப்பணியில் 5 ஆயிரம் சமையல் கலைஞர்கள் ஈடுபட்டனர். 90 ஆயிரம் கிலோ அரிசி, 30 ஆயிரம் கிலோ பருப்பு மற்றும் காய்கறிகள், பலசரக்கு பொருட்கள் தேவையான அளவிற்கு நேற்று முதல் வந்து இறக்கப்பட்டன. பெரிய பாக்கு மட்டை தட்டுகளில் தொண்டர்களுக்கு உணவு விநியோகம் செய்யப்படுகிறது. புளிசாதம், பருப்பு சாதம், ஒரு பொறியல், துவையல் போன்றவை வழங்கப்படுகிறது. இதில், புளிசாதம் எந்நேரமும் கிடைக்கும் வகையில் பார்சல் செய்து தொண்டர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
தமிழகம் முழுவதும் இருந்து வரும் நிர்வாகிகள், தொண்டர்கள் விரகனூர் சந்திப்பு, மண்டேலா நகர் வழியாகவும், கப்பலூர் டோல்கேட் மற்றும் தோப்பூர் வழியாக விமானநிலையம் செல்லும் சாலை மற்றும் காரியாப்பட்டி மார்க்கமாக வலையங்குளம் வழியாகவும் மாநாடு நடக்கும் வலையங்குளத்திற்கு எளிதாக வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வருகிறவர்களுடைய வாகனங்களை நிறுத்துவதற்கு 350 ஏக்கரில் வாகனம் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளன. கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள் தேவையான அளவு அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்களில் வருவோர் முந்தைய நாள் இரவு மாநாடு நடக்கும் இடத்திற்கு வருவதற்கு 10 கி.மீ., சுற்றளவில் இரவை பகலாக்கும் மின்விளக்குள் அமைக்கப்பட்டுள்ளன.
தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மாவட்டநிர்வாகிகள், எம்எல்ஏ-க்கள், முன்னாள் எம்எல்ஏ-க்கள் போன்றோர் தங்குவதற்கு மதுரையில் உள்ள ஹோட்டல்கள், சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்கள், வீடுகளை பிடித்து முன்பதிவு செய்து முடித்துவிட்டனர். அதுபோல், மாநாடு நடக்கும் இடத்துக்கு அருகிலே முக்கிய தலைவர்கள் தங்குவதற்கு சகல வசதிகள் கொண்டு தற்காலிக வீடுகள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
மாநாடு அன்று 20-ம் தேதி காலையில் 51 அடி உயரம் உள்ள கொடிகம்பத்தில் பழனிசாமி அதிமுக கொடியெற்றி வைத்துவிட்டு சென்று விடுகிறார். பிறகு மாலை 4 மணி வரை இசைநிகழ்ச்சி, பட்டிமன்றம், பேச்சு அரங்கம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மாலை வரை நடக்கிறது. மாலை 4 மணிக்கு மீண்டும் வரும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் அக்கட்சி தலைவர்கள் தொண்டர் மத்தியில் மாநாட்டு மேடையில் பேசுகிறார்கள்.
மாநாட்டுக்கு மொத்தம் 15 லட்சம் பேர் வருவார்கள் என அதிமுக தலைமை எதிர்பார்க்கிறது. இதற்கு முன், 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன் அதிமுக எதிர்கட்சியாக இருந்தபோது ஜெயலலிதா மதுரை, கோவை, திருச்சி போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மாநாடு போல் பிரமாண்டமான கூட்டத்தை கூட்டி தமிழக அரசியலில் தனக்கான செல்வாக்கை காட்டினர். அந்த தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சியைப் பிடிக்க அதுபோன்ற பிரமாண்ட கூட்டங்கள் முக்கிய காரணமானது. அதுபோலவே எடப்பாடி பழனிசாமியும், வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன் மக்கள் மத்தியில் தனக்கான செல்வாக்கை நிரூபிக்க பிரமாண்ட கூட்டத்தை காட்ட திட்டமிட்டு முதற்கட்டமாக பரிசோதனை முயற்சியாக மதுரையில் மாநில மாநாட்டை நடத்துகிறார்.
இந்த மாநாட்டில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள தொண்டர்களை அழைத்துவர பிரத்யேக ஏற்பாடுகளை அதிமுகவினர் செய்திருக்கின்றனர். ரயில் மார்க்கமாகவும், பேருந்து மார்க்கமாகவும் தொண்டர்கள் அழைத்து வரப்படுகின்றனர். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் முதல் பிரச்சாரக் கூட்டமாகவும் இந்த அதிமுக மாநாடு பேசப்படும் நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு வித்திடுமா இந்த மாநாடு என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.