/indian-express-tamil/media/media_files/2025/04/25/ZBjbdKMOxGmwrCDT5DJf.jpg)
மதுரையில் 25 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் 12 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற குற்றவாளிகள், நீதிமன்றத்தில் நீதிபதியையே கொலை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு மார்ச் 7 ஆம் தேதி, மதுரை மாநகரின் கீரைத்துறை காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வில்லாபுரம் கிழக்கு தெரு முனியான்டி கோவில் அருகே உள்ள கருவேலங்காட்டில் காவல்துறையினர் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். அங்கு வெள்ளை சாக்கில் கஞ்சாவுடன் நின்றிருந்த மூவரை கைது செய்தனர்.
சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டதில், மதுரை புதுஜெயில் ரோடு முரட்டம்பத்திரியைச் சேர்ந்த பாண்டியராஜன், அவரது சகோதரர் பிரசாந்த் மற்றும் மனைவி சரண்யா ஆகியோர் 25 கிலோ உலர் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விசாரணையில், கஞ்சா மதுரை காமராஜபுரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான வெள்ளைக்காளியின் அண்ணன் சின்னமுனுசு மகன் சண்முகவேல் என்பவரால் கொடுக்கப்பட்டதாகவும், அவர் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை வாங்கி திருச்சியில் சிறைக்கு சென்றுவிட்டதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இறுதியாக, நீதிபதி ஹரிஹரகுமார் மூவருக்கும் தலா 12 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.அப்போது திடீரென குற்றவாளிகள் பாண்டியராஜன் மற்றும் பிரசாந்த் நீதிபதியை கொலை செய்யப்போவதாக மிரட்டினர்.
மேலும் நீதிமன்றக் கூடத்தின் கண்ணாடியை உடைத்து, கையில் ரத்தம் சொட்டும் நிலையில், “நாங்கள் வெள்ளைக்காளி பசங்கதான். நீதிபதியை கொல்லாமல் விடமாட்டோம்” எனப் பேசி, காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து, பாதுகாப்பிற்காக வந்த காவல்துறையினர் இருவரையும் கட்டுப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். இதன் பின்னர், அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அண்ணாநகர் காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் குருசாமி மற்றும் வெள்ளைக்காளி தரப்புகளுக்கு இடையேயான மோதலில் இதுவரை 22 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கிளாமர் காளி கொலை வழக்கில் சுபாஸ்சந்திரபோசை என்கவுண்டர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் நேரடியாகவே நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம், நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுபோன்ற தைரியமான குற்றவாளிகள் மீது காவல்துறை இரும்புக்கரம் கொண்டு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.