மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைக்கேடு புகார் தொடர்பாக விசாரணை செய்து வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான விசாரணை ஆணையத்தை முடித்து வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நடைபெற்றதாக கூறப்பட்ட கிரானைட் முறைகேடு புகார் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2014 ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த புகார் சம்பந்தமாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து, 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போதைய தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு உத்தரவிட்டது.
அதன்படி சகாயம் குழு தன் விசாரணையை முடித்து, 2015 நவம்பரில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததால், அரசுக்கு, ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், இதுசம்பந்தமாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும், முறைகேட்டுக்கு துணை போன அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 212 பரிந்துரைகளை வழங்கியிருந்தார்.
இந்த அறிக்கைக்கு பதிலளித்து, தமிழக தலைமைச் செயலாளர் தரப்பில் 145 பக்க பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சகாயம் குழு அளித்த 212 பரிந்துரைகளில், 131 பரிந்துரைகளை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. சட்ட வரம்புக்கு அப்பாற்பட்ட 67 பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிரானைட்களின் மதிப்பை கணக்கிட்ட நடைமுறை தவறானது என்றும், ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தவறாக கணக்கிடப்பட்டுள்ளதாகவும், கிரானைட் முறைகேடுகள் குறித்து அரசின் கவனத்திற்கு வந்ததும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதால் இதுசம்பந்தமாக சி.பி.ஐ. விசாரிக்க தேவையில்லை எனவும், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டியதற்கான உரிய காரணங்களை சகாயம் குழு, தன் அறிக்கையில் தெரிவிக்கவில்லை எனவும், இந்த வழக்கு காரணமாக, பறிமுதல் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 482 கிரானைட் கற்களை விற்க முடியாத நிலை உள்ளது எனவும், முறைகேட்டுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அதனால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் தலைமைச் செயலாளரின் பதிலில் ஏற்கனவே தெரிவிக்கபட்டு இருந்தது.
இதனையடுத்து சகாயம் குழு அறிக்கையின் படி தமிழக அரசு எடுக்க உள்ள நிலை தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஜி.ஜெயசந்திரன் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பி.ஆர்.பி நிறுவனத்தின் சார்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யபட்டது, அதில் மதுரையை தவிர பிற பகுதிகளில் கிரானைட் வெட்டி எடுப்பதற்கு ஏற்றுமதி செய்வதற்கும் அனுமதியளிக்க கோரிய பி.ஆர்.பி நிறுவனத்தின் மனு தாக்கல் செய்தது. அதில் பி.ஆர்.பி. உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கும், தமிழகத்தில் உள்ள துறைமுகங்களுக்கும் டி.எஸ்.பி. கடிதம் ஒன்றை எழுதியுள்ளர். அதில், கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனங்களின் அனைத்து கணக்குகளையும் முடக்க வேண்டுமெனவும், அவற்றின் சரக்குகளை ஏற்றுமதி செய்யக்கூடாது எனவும் எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தால் மதுரை பகுதியை தாண்டிய பிற பகுதிகளில் தங்களின் தொழில் நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாததால் அதிக சிரமத்துக்கு உள்ளாவதாகவும், அதனால் டிஎஸ்பி கடிதத்தை ரத்து செய்ய வேண்டுமென மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனுவை நீதிபதிகள் சிவஞானம், ஜெயச்சந்திரன் விசாரித்தனர். அப்போது பி.ஆர்.பி நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கிரானைட் வெட்டியெடுப்பது தொடர்பாக தடையால் நான்காண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டி.எஸ்.பி. கடிதத்தால் மேலும் நஷ்டத்தில் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது தமிழக அரசு தரப்பில், கிரானைட் எங்கிருந்து வெட்டி எடுக்கப்பட்டது என கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும், அதனாலேயே மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிரானைட்டையும் ஏற்றுமதி செய்வதை அனுமதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.
அரசின் இந்த பதிலால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், வெட்டியெடுக்கப்பட்ட கிரானைட் எங்கிருந்து எடுக்கப்பட்டது என அரசுக்கே தெரியாவிட்டால், அரசு இயந்திரம் செயலற்றதாமவே கருத வேண்டியுள்ளது என தெரிவித்தனர். ஒரு சிறிய நகை காணாமல் போனாமல் கூட எளிதில் கண்டுபிடிக்கும் அரசால், கிரானைட் எங்கு வெட்டியது என கண்டறிய முடியாதா என கேள்வி எழுப்பினர். மேலும் வெட்டப்பட்ட கிரானைட்டை துறை சார்ந்த அதிகாரிகள் ஒரு முறை பார்த்தாலே அதன் வடிவமைப்பை வைத்தே எங்கிருந்து வெட்டப்பட்டது என கண்டறிந்து விடுவார்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதன் பிறகு பி.ஆர்.பி. நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுதரார் கோரிக்கை குறித்து உரிய அரசு துறைகளை அனுகும்படி உத்தரவிட்டு அதனை பரிசீலித்து அதிகாரிகள் உரிய உத்தரவுகளை பிறப்பிப்பார்கள் என தெரிவித்த நீதிபதிகள் பி.ஆர்.பி நிறுவனம் மனுவை தள்ளுபடி செய்தனர்.
இதனையடுத்து சகாயம் குழுவின் விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டுள்ளதாலும், கமிஷன் பணிகள் முடிந்துள்ளதாலும் கமிஷனை விடுவிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் மூலம் விசாரணை பணிகள் முடிவுக்கு வருகின்றது. இதனையடுத்து வழக்கின் விசாரணை ஏப்ரல் 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.