Madurai HC reserves case to add PM Modi photo in Chess Olympiad advertisements: செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் பிரதமர் மோடியின் பெயர் மற்றும் புகைப்படம் சேர்க்க கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் இன்று முதல் தொடங்குகிறது. இதில் 180க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துக் கொள்கின்றனர். இதற்காக தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது.
இதையும் படியுங்கள்: Chess Olympiad 2022 | சென்னையில் போக்குவரத்து மாற்றம்: தவிர்க்க வேண்டிய வழிகள் இங்கே
இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி விழாவில் கலந்துக் கொண்டு, போட்டியை தொடங்கி வைக்கிறார்.
முன்னதாக, செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக, தமிழக அரசு சார்பில் பாடல் வெளியிடப்பட்டது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இந்த பாடலில், ஸ்டாலின் மற்றும் ரகுமான் இடம்பெற்று செஸ் வீரர்களை வரவேற்றனர்.
இந்தப்பாடலில், பிரதமர் மோடி இடம்பெறாதது மற்றும் செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் பிரதமர் படம் இடம்பெறாததையடுத்து, இந்த விவகாரம் சர்ச்சையானது.
இந்தநிலையில், சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் பிரதமர் மோடியின் பெயர் மற்றும் புகைப்படத்தைச் சேர்க்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "தமிழகத்தில் சென்னை மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்க உள்ளது. பிரதமர் மோடி இந்த போட்டிகளை தொடங்கி வைக்க உள்ளார். ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ள இந்த போட்டியின் விளம்பரத்திற்காக பெருமளவிலான பொதுமக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற, நாட்டிற்கு பெருமை சேர்க்கக்கூடிய நிகழ்வு இது. ஆனால் ஆளும் கட்சி இதனை தங்களுக்கான அரசியல் ஆதாயம் தேடும் நிகழ்வாக பயன்படுத்திக் கொண்டது. இதற்காக இந்நிகழ்விற்கான விளம்பரங்களில், இந்திய குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படங்களை தவிர்த்து முதல்வரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. ஆகவே, "44 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் பெயர் மற்றும் புகைப்படத்தை சேர்க்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி அமர்வு, முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், டெல்லியிலிருந்து மூத்த வழக்கறிஞர் அணில் காணொலி வழியாக ஆஜராகினார்.
தலைமை நீதிபதி, "இந்த நிகழ்வு நமது நாட்டிற்கு, சிறப்பாக தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு. பிரதமர் இந்நிகழ்வை தொடங்கி வைப்பதாக நாளிதழ்களில் செய்யப்பட்ட விளம்பரங்களில், பிரதமரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தல் காரணமாக குடியரசுத் தலைவரின் புகைப்படம் இடம்பெறவில்லை. மதுரையில் இருப்பதால், அந்நிகழ்வில் கலந்து கொள்ள இயலவில்லை. அதனை தவறவிடுவதாக வருந்துகிறேன்" என குறிப்பிட்டார்.
மனுதாரர் தரப்பில், பிரதமரின் புகைப்படத்தை இத்தகைய நிகழ்வில் இடம்பெறச் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது ஏற்கத்தக்கதல்ல. அதற்கு தமிழக அரசுத்தரப்பில் மன்னிப்பு கோர வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசுத்தரப்பில், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து "தமிழக அரசு இந்நிகழ்வை ஒருங்கிணைத்துள்ளது. பிரதமர் வருகை 22ஆம் தேதியே உறுதி செய்யப்பட்டு மத்திய அமைச்சகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்றைய நாளிதழிளில் கூட பிரதமரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு தலைமைநீதிபதி அமர்வு, "குடியரசுத் தலைவரும், பிரதமரும் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவர்களின் புகைப்படம் இடம்பெற்றிருக்கலாமே? 100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் சூழலில் நாட்டை முன்னிலைப்படுத்த வேண்டும்" என குறிப்பிட்டார்.
தொடர்ந்து, "முதலில் இது நமது தேசத்திற்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு. சோவியத் யூனியன் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழகத்தில் நடத்த முடிவெடுத்தது பெருமைமிக்கது. தேசம் குடியரசுத்தலைவர், பிரதமரின் கீழ் நிர்வகிக்கப்படும் சூழலில், இது போன்ற சர்வதேச நிகழ்வை இணைந்து நடத்த வேண்டும்" என கருத்து தெரிவித்து வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.