Madurai High Court : கேரளத்தில் நடக்கும் கட்டுமானப் பணிகள், சாலைப் பணிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புப் பணிகளுக்குத் தேவையான கிராவல் ஜல்லி கற்கள். எம்.சாண்ட் மணல், குவாரி தூசி மற்றும் மணல் ஆகியவை தமிழ்நாட்டில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில், 10 சக்கரங்களுக்கு மேற்பட்ட வாகனங்களில் கனிமங்கள் கொண்டுச் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுத்தாக்கல் ஒன்று செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். தொடர்ந்து இது தொடர்பாக உத்தரவிட்ட நீதிபதி, “தமிழ்நாட்டுக்கு கடந்த 2021-22-இல் பெரும் கனிமங்கள் மூலம் ரூ.817.52 கோடியும், 2022-23-ல் ரூ 1049.22 கோடியும் சிறு கனிமங்கள் மூலம் 2021-22-ல் 365.89 கோடியும். 2022-23-ல் 598.29 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.
ஆனால், 2022-23-ல் மட்டும் கர்நாடகாவில் ரூ.5,945.77 கோடியும், ஆந்திராவில் ரூ.4,756 கோடியும், கேரளாவில் ரூ.317 கோடியும் வருமானம் கிடைத்துள்ளது. சிறு கனிமங்கள் மூலம் மிகக் குறைந்த அளவே வருவாய் கிடைத்துள்ளது.
உரிமம் வரித் தொகை கட்டணம் 2 தலைமுறைகளாக உயர்த்தப்படவில்லை. தற்போதுதான் இந்தக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
எனவே, கனிமவளத் துறை ஆணையர் தரப்பில் உரிய விளக்கமளிக்க வேண்டும். 10 சக்கரங்களுக்கு மேற்பட்ட லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்லக் கூடாது என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது” என்றார்.
இந்த மனு தொடர்பான அடுத்த விசாரணை நவம்பர் மாதம் 25-ஆம் தேதியில் வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“