மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் பட்டாபிஷேக நிகழ்ச்சியின்போது, அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி கணவரை இழந்தவர் என்பதால் அவரிடம் செங்கோல் வழங்கக்கூடாது என தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் 8வது நாள் சிகர நிகழ்ச்சியான மதுரை மீனாட்சியம்மன் பட்டாபிஷேகத்தில் செங்கோல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்நிலையில் கணவரை இழந்தவரிடம் செங்கோல் வழங்கக்கூடாது எனக்கூறி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மதுரையைச் சேர்ந்த தினகரன் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ”மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா என்பது பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஆகம விதிகள் படி நடைபெறும். விழாவின் 8வது நாள் நடைபெறும் பட்டாபிஷேக நிகழ்ச்சியில் மீனாட்சியம்மனிடம் செங்கோல் வழங்கப்படும். அந்த செங்கோலை அம்மன் கையில் இருந்து கோவில் அறங்காவலர் குழு தலைவர் பெற்றுக் கொள்வார். ஆகம விதிகளின் படி திருமணம் ஆகாதவரோ, கணவர் அல்லது மனைவியை இழந்தவரோ செங்கோலை பெற்று கொள்ள முடியாது.
தற்போது மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக ருக்மணி பழனிவேல்ராஜன் உள்ளார். அவர் கணவரை இழந்தவர் என்பதால் கோயிலின் விதிகளை பின்பற்றி அவரிடம் செங்கோலை வழங்க இயலாது. வேறு தகுதியான நபரிடம் செங்கோலை வழங்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு என்பது மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சரவணன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆகம விதிகளின்படி செங்கோல் வழங்க வேண்டும். தற்போதைய அறங்காவலர் குழு தலைவர் ருக்மணியிடம் செங்கோல் வழங்கக்கூடாது என மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் வழக்கறிஞர் வீர கதிரவன், ”இது போன்ற மனுவை ஏற்கனவே உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்து, தள்ளுபடி செய்துள்ளது. எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. இதை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சரவணன், ”திருமணம் ஆகாதவர்கள், கணவன் அல்லது மனைவியை இழந்தவர்கள் செங்கோலை வாங்கக் கூடாது என ஆகம விதிகளில் எங்கு உள்ளது? ஆகம விதியில் எந்த இடத்தில் இந்த விஷயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிலுக்குள் இந்துக்கள் அனைவரும் தானே செல்கிறார்கள்? செங்கோல் வாங்குபவரும் இந்து தானே? என கேள்வி எழுப்பினார்.
மேலும் ”விழா தொடங்கிய பிறகு இறுதிக்கட்டத்தில் மனுவை தாக்கல் செய்வது ஏற்புடையது அல்ல. மேலும் இந்த காலத்திலும் இந்த காரணத்தை முன்வைப்பது ஏற்கத்தக்கதல்ல” எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“