தூத்துக்குடியில் ஏன் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிடப்பட்டது? - அரசு பதிலளிக்க உத்தரவு

தூத்துக்குடியில் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிடப்பட்டது?

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22ம் தேதி மற்றும் 23ம் தேதிகளில், போலீசாரின் தடையையும் மீறி நடந்த, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்தது.

இதைத்தொடர்ந்து துப்பாக்கிச்சூடு தொடர்பாக டிஜிபி உட்பட தமிழக அரசு அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என முத்து அமுதநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இதேபோல் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 9 பேர் கொண்ட குழு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என கந்தகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த இரண்டு வழக்குகளையும் உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று விசாரித்தது. அப்போது தூத்துக்குடியில் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிடப்பட்டது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், இதுதொடர்பாக வரும் 6ம் தேதி பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

×Close
×Close