/tamil-ie/media/media_files/uploads/2017/12/z1036.jpg)
சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான மதுரை ஆதீன மடம் திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது. 1980 முதல் இந்த மடத்தின் 292- வது ஆதீனமாக அருணகிரிநாத சுவாமி இருந்து வருகிறார். பெங்களூர் பிடுதியில் ஆசிரமம் நடத்தி வரும் நித்யானந்தாவை 293-வது ஆதீனமாக 2012-ல் அருணகிரிநாதர் நியமனம் செயதார்.
இந்நிலையில், மதுரை ஆதீன மடத்தின் நிர்வாகத்தை அறநிலையத் துறையிடம் ஒப்படைக்கக் கோரி, மதுரை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு 2013-ல் விசாரணைக்கு வந்தபோது இளைய ஆதீனம் பதவியில் இருந்து நித்யானந்தாவை நீக்கிவிட்டதாக அருணகிரிநாதர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இதற்கிடையே, மதுரை ஆதீன மடத்தின் 293-வது ஆதீனமாக திருநாவுக்கரசு என்பவரை அருணகிரிநாதர் நியமித்தார்.
இந்நிலையில், நித்யானந்தா சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘என்னை நீக்க அருணகிரிநாதருக்கு அதிகாரம் இல்லை. திருநாவுக்கரசு என்பவரை அடுத்த ஆதீனமாக நியமனம் செய்ததும் செல்லாது. ஆகவே, 293-வது ஆதீனம் என்ற முறையில் மதுரை ஆதீன மடத்துக்குள் செல்ல எனக்கு அனுமதி தர வேண்டும் என கோரினார்.
இதைத் தொடர்ந்து, 292-வது ஆதினம் உயிருடன் இருக்கையில் 293-வது ஆதினத்தை நியமிக்க அவசியமில்லை என தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்திருந்தது. இம்மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் அதனை ஏற்றுக் கொண்டது. மேலும், 293வது மடாதிபதி என தாக்கல் செய்த மனுவை நித்யானந்தா திரும்பப்பெறாவிட்டால் குற்ற நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளது.
தொடர்ந்து, இவ்வழக்கு விசாரணையை ஜன. 3-க்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.